முக்கிய செய்திகள்:
I.A.S., I.P.S., I.R.S., பணிகளுக்கான பிரதான எழுத்துத் தேர்வுகள் தொடங்கியது - நாடு முழுவதிலும் இருந்து 13,500 பேர் பங்கேற்பு

I.A.S., I.P.S., மற்றும் I.R.S., பணிகளுக்கான பிரதான எழுத்துத் தேர்வுகள் இன்று தொடங்கி, வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. இத்தேர்வுகளை நாடு முழுவதிலும் இருந்து 13 ஆயிரத்து 500 பேர் எழுதுகின்றனர்.

I.A.S., I.P.S., மற்றும் I.R.S., பணிகளுக்கான ஆயிரம் காலியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த மே மாதம் 26-ம் தேதி நடைபெற்ற முதல்நிலைத் தேர்வை 10 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி வெளியிடப்பட்டு, அதில் வெற்றி பெற்ற 13 ஆயிரத்து 500 பேர், பிரதான தேர்வு எழுத தகுதிபெற்றனர். அதன்படி, I.A.S. உள்ளிட்ட பணிகளுக்கான பிரதான தேர்வுகள், இன்று முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. டெல்லி மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், வரும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இத்தேர்வுகள் நடைபெறாது.

தமிழகத்தில் சென்னையில் காயிதேமில்லத் அரசு மகளிர் கல்லூரி, ராணிமேரி கல்லூரி ஆகிய மையங்களில் 945 பேர் இந்தத் தேர்வுகளை எழுதுகின்றனர். காலை 9 மணி முதல் 12 மணி வரை முதல் கட்டமாகவும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை 2-ம் கட்டமாகவும் இத்தேர்வு நடைபெறுகிறது. பிரதான தேர்வு முறையில் இந்த ஆண்டு பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 2 தாள்களாக இருந்த விருப்பப்பாடம் தற்போது ஒருதாளாக குறைக்கப்பட்டுள்ளது. பொது அறி​வுத்தாள்கள் 2-லிருந்து 4-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விடைகள் எத்தனை பக்கங்களுக்குள் எழுத வேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த பிரதான தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டு, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணிநியமனம் செய்யப்படுவர்.

மேலும் செய்திகள்