முக்கிய செய்திகள்:
தமிழக மக்களின் மன உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்புக் கொள்கையை மத்திய அரசு நீட்டித்து வருவதற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனம்

தமிழக மக்களின் மன உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்புக் கொள்கையை நீடித்து வருவதற்கு, முதலமைச்சர் ​ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு, இந்திய கடற்படை அளிக்க உத்தேசித்துள்ள பயிற்சியைத் தொடரக்கூடாது என பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும், இதுதொடர்பான பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்கையை உடனடியாக மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, (நேற்று ) பிரதமர் டாக்டர். மன்மோகன்சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போருக்குப் பின்னர், அங்கு வாழும் சிறுபான்மை தமிழர்கள் மீது, திட்டமிட்டு இனப்படுகொலையை நிறைவேற்றிய தற்போதைய இலங்கை அரசுடன், இந்தியாவின் நல்லுறவுகள் நீடிப்பது தொடர்பாகவும், இப்பிரச்னையில், தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் வலுவான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும், கடந்த 2 ஆண்டுகளாக, தாம் எண்ணற்ற கடிதங்கள் மூலம் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் பாரபட்சமான நிலை நீடித்து வருவது ஆகியவற்றைக் கண்டித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஏற்கெனவே, 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன - கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது, அப்பாவி தமிழக மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் எவ்வித முகாந்திரமும் இல்லாமல், அத்துமீறி தாக்குதல் நடத்துவது; இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களின் தண்டனைக் காலத்தை நீட்டிப்பது; அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை பறித்துச் செல்லுதல் போன்ற இலங்கை அரசின் காரணமற்ற செயல்பாடுகள் மற்றும் கொடூரத் தனமான செயல்கள் தொடர்ந்து நீடிப்பது மற்றொரு கவலையளிக்கக்கூடிய பிரச்னையாகும் - இதன் காரணமாக, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி வருவதாவும் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது, தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலைச் சம்பவங்களுக்கும், அங்கு வாழும் தமிழர்களை தொடர்ந்து பாரபட்சமான முறையில் நடத்துவதற்கும் தற்போதைய இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டியது அவசியம் என தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்துத் தரப்பினரிடையேயும் பரவலான - ஆழமான உணர்வுகள் ஏற்பட்டுள்ளது - மேலும், நடுக்கடலில் தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் அத்துமீறி கடத்தப்படுவதற்கு, தமிழகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த மீனவர் சமுதாயம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது - இந்தச்சூழலில், இலங்கையை நட்பு நாடு என அழைப்பதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருப்பதையும் முதலமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில், இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதற்கு தாம் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இப்பிரச்னையில், தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோபத்தை வெளிப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு ஜூலை 16, ஆகஸ்ட் 25, 28 மற்றும் கடந்த ஜுன் மாதம் 8 ஆகிய தேதிகளில், பிரதமருக்கு, கடிதம் எழுதியிருந்ததையும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மக்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை முற்றிலுமாக நிறுத்துவதற்கு அந்நாட்டு அரசு நம்பகமான, திருப்தியளிக்கக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவரையிலும், தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கைக் கடற்படை அத்துமீறி, ஆத்திரமூட்டும் வகையில் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவராதவரையிலும், இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சியோ அல்லது அந்நாட்டு பாதுகாப்புப் படையுடன் எந்தவகையிலும் ஒத்துழைப்பையோ மேற்கொள்வதில்லை என்ற தெளிவான கொள்கை முடிவை பாதுகாப்பு அமைச்சகம் எடுப்பதற்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என பிரதமரை, தாம் வலியுறுத்தியிருந்ததையும் முதலமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை ராணுவத்துக்கு, எந்தவிதமான உதவியையும் வழங்க மாட்டோம் என்ற உறுதி அளிப்பதுடன், அந்நாட்டிற்கு கடற்படைக் கப்பல்கள் வழங்குவதற்கான மத்திய அரசின் ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக் கோரி, கடந்த செப்டம்பர் மாதம் 11-ம் தேதி பிரதமருக்கு, தாம் கடிதம் எழுதியிருந்ததையும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்படையினருக்கு, இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் 4 ஆண்டுகால தொழில்நுட்பக் கல்வியை வழங்கி, இந்திய கடற்படை பயிற்சி வழங்க இருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள், தமக்கு, மிகுந்த திகைப்பை ஏற்படுத்தியுள்ளது - இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இந்திய கடற்படை தலைமைத் தளபதி சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளிவந்திருப்பது, தமிழக மக்களை மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது - தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பளிக்காமல், இந்திய அரசு, இலங்கை ராணுவப் படையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்புக் கொள்கையை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது - இலங்கை அரசுடன், மத்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடந்து கொள்வதுடன், அந்நாட்டு அரசுக்கு தேவையான பாதுகாப்பு உதவிகளை செய்து வருவது, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எதிரான செயல் என்பதோடு மட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படையினரால் காட்டுமிராண்டித்தனமான வகையில் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் ஏழை இந்திய மீனவர்களுக்கு எதிரான செயலும் ஆகும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களின் மன உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், அதனை முற்றிலும் புறந்தள்ளிவிட்டு, உணர்வுபூர்வமற்ற வகையில், இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்புக் கொள்கையை நீடித்து வருவதற்கு, தாம் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு, இந்திய கடற்படை அளிக்க உத்தேசித்துள்ள பயிற்சியைத் தொடரக்கூடாது என பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் - இதுதொடர்பான பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்கையை உடனடியாக மறு பரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமரை, தாம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா, தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்