முக்கிய செய்திகள்:
தமிழகத்தில் நாளை ஆறரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதல்நிலைத் தேர்வு - அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக தேர்வாணையம் தகவல்

தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதல்நிலைத் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் இத்தேர்வினை ஆறரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்.

தமிழகத்தில் துணை வணிகவரி அதிகாரி, சார் பதிவாளர் நிலை-2, தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர், வருவாய்துறை உதவியாளர், கூட்டுறவு சங்கம் மற்றும் பால்வளத்துறையில் முதுநிலை ஆய்வாளர் உள்ளிட்ட ஆயிரத்து 64 பணியிடங்களை நிரப்புவதற்காக, குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நாளை நடைபெறுகிறது. இத்தேர்வுக்காக, தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 269 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் இத்தேர்வினை 6 லட்சத்து 64 ஆயிரத்து 583 பேர் எழுதவுள்ளனர். சென்னையில் 263 மையங்களில் நடைபெறும் இத்தேர்வினை, 79 ஆயிரத்து 550 பேர் எழுதவுள்ளனர். இத்தேர்வுக்கான ஆயத்தப்பணிகள் குறித்து, டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து, தேர்வு நடைமுறைகளை கையாள்வது குறித்து, மாவட்ட ஆட்சியர்கள், தலைமை தேர்வு கண்காணிப்பாளர்களுக்கும், தேர்வு கண்காணிப்பாளர்களுக்கும் விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.

குரூப்-2 முதல்நிலைத் தேர்வினை கண்காணிக்க பறக்கும் படைகளும், வாகன பறக்கும் படைகளும் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருப்பதாகவும், தேர்வு நடைபெறும் மையங்களை முழுமையாக வீடியோ பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. , முக்கியத்துவம் வாய்ந்த பதவிகள், குரூப்-2 தேர்வு மூலமும் தேர்ந்தெடுக்கப்படுவதால், தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. முதல்நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்காணல் என, குரூப்-2 தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்ட பின்னர் நடத்தப்படும் முதல்தேர்வு, இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்