முக்கிய செய்திகள்:
ஏற்காடு தேர்தலில் பொய்யான, விஷமத்தனமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு, விதிமுறை மீறல் - தி.மு.க.வின் அங்கீகாரத்தை ரத்து செய்ய, தலைமை தேர்தல் ஆணையரிடம் அ.இ.அ.தி.மு.க வலியுறுத்தல்

ஏற்காடு இடைத்தேர்தலில் பொய்யான, விஷமத்தனமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு, தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம், வேட்டி-சேலை போன்றவற்றை வழங்கி தொடர்ந்து தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் தி.மு.க.வின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் அ.இ.அ.தி.மு.க. சார்பில் நேற்று மனு அளிக்கப்பட்டது.

ஏற்காடு இடைத்தேர்தலில் முதலமைச்சர் .ஜெயலலிதா (நேற்று) சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டதையடுத்து, அ.இ.அ.தி.மு.க.வின் வெற்றி உறுதி என தெரிந்துவிட்டதால், தி.மு.க.வினர் தோல்வி பயத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முரணாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்ற அ.இ.அ.தி.மு.க. குழு தலைவர் டாக்டர்.மு.தம்பிதுரை தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. எம்.பி.-க்கள் குழு, தலைமை தேர்தல் ஆணையர் திரு.வி.எஸ்.சம்பத்தை சந்தித்து (இன்று) மனு அளித்தனர். தமிழக நிதியமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் தயாரித்துள்ள இந்த மனுவில், தமிழ்நாட்டில் ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க.வினர் தேர்தல் முறைகேடுகளிலும், சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதை தேர்தல் ஆணையரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி.மு.க.வினர் கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற திருமங்கலம் இடைத்தேர்தலில் மிகப்பெரிய அளவில் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதுடன், வன்முறையை பெருமளவில் கட்டவிழ்த்துவிட்டு வாக்காளர்களை அச்சுறுத்தினர் - தற்போது, ஏற்காடு இடைத்தேர்தலிலும் இதே நடைமுறையை தி.மு.க.வினர் மேற்கொண்டு வருகின்றனர் - தி.மு.க.வின் உள்ளூர் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. T.M. செல்வகணபதி, தலைமையில் அவரின் நேரடி மேற்பார்வையில், சேலம் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரான திரு. எஸ்.ஆர். சிவலிங்கம், தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பகிர்ந்தளிக்கவும், மது மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கியும், ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தவறான வழியில் வாக்குகளைப் பெற முயற்சி செய்கின்றனர் - ஏற்காடு தொகுதியில், கடந்த 25ம் தேதி, அதிகாலை 4 மணியளவில் திரு. செல்வகணபதி, திரு. எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் எ.வ. வேலு உள்ளிட்ட தி.மு.க.வினர், வாக்காளர் ஒவ்வொருவருக்கும் 500 ரூபாய் வீதம் தொகுதி முழுவதும் வழங்கினர் - அதிகாலையில், ஒரே நேரத்தில் இந்த பணம் பட்டுவாடா செய்யப்பட்டதால், தேர்தல் அதிகாரிகளால் இதனைத் தடுக்க முடியவில்லை என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஏற்காடு தொகுதியில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடவும், வாக்காளர்களுக்கு பணம் அளிக்கவும், தி.மு.க.வினர் ரவுடிகளையும், கூலிப்படையினரையும் கொண்டுவந்து குவித்துள்ளனர் - வாழப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட, அத்தனூர் பஞ்சாயத்துத் தலைவர் திருமுருக பாண்டியன், தும்பல் பஞ்சாயத்துத் தலைவர் கணேசன் ஆகியோர், செல்வகணபதி, எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளுடன் சேர்ந்து நேரடியாக வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததுடன், அப்பாவி பொதுமக்களை தங்களுக்கு வாக்களிக்கும்படி மிரட்டலும் விடுத்துள்ளனர் - தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என தி.மு.க.வினர், பொதுமக்களை மிரட்டியும், வன்முறையில் ஈடுபட்டும் வருகின்றனர் - தொகுதியின் பல்வேறு இடங்களில் கலவரத்தைத் தூண்டியும், வன்முறையை கட்டவிழ்த்து விட்டும் வாக்காளர்களை அச்சுறுத்தி வருகின்றனர் - கடந்த 26ம் தேதி இரவு பெரியகவுண்டாபுரம் கிராமத்தில், அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்த திரு. மணிகண்டன் என்பவரை, தி.மு.க.-வினர் கடுமையாகத் தாக்கியதில் அவர் கை-கால்கள் செயலிழந்து போயின - இதுபோன்று அப்பாவி பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி தி.மு.க.வினர் தேர்தல் ஆதாயம் தேடி வருகின்றனர் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி.மு.க.வினர், இதுபோன்ற தேர்தல் முறைகேடுகள் மற்றும் வன்முறைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் அதேவேளையில், வஞ்சகமாக அ.இ.அ.தி.மு.க.வினர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர் - கடந்த 2009ம் ஆண்டு திருமங்கலம் இடைத்தேர்தலில், தி.மு.க.வினர் கடைபிடித்த இதுபோன்ற மோசமான நடவடிக்கைகளை, தற்போது ஏற்காடு தொகுதியிலும் செயல்படுத்தி வருகின்றனர் - தொடர்ச்சியாக வன்முறையிலும், தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் தி.மு.க.வினர், அவற்றை மறைத்து பிரச்னையை திசை திருப்ப அ.இ.அ.தி.மு.க.வினர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி புகார் அளித்து வருகின்றனர் - ஏற்காடு தொகுதியில் அமைச்சர்கள் திரு. V. செந்தில்பாலாஜி, திருமதி. பா. வளர்மதி, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். மு. தம்பிதுரை ஆகியோர் மீது, காவல்துறையினரும், தேர்தல் அதிகாரிகளும் வழக்குகள் பதிவு செய்திருப்பதில் இருந்தே இத்தொகுதியில், அரசு அதிகாரிகளும், அ.இ.அ.தி.மு.க.வினரும் ஒத்துழைப்புடன் செயல்படுகின்றனர் என்ற தி.மு.க.வின் குற்றச்சாட்டு பொய்யானது என்பது நிரூபனமாகிறது - தி.மு.க.வினரின் தவறுகளை மறைக்கவும், பிரச்னையை திசை திருப்பவுமே இதுபோன்ற பொய்ப் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன - போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. V. செந்தில் பாலாஜி, சமூகநலத்துறை அமைச்சர் திருமதி. பா. வளர்மதி, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம். தம்பிதுரை ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை - எந்த முகாந்திரமும் இல்லாதவை என்பதைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் திரு. டி.ஆர். பாலு, அ.இ.அ.தி.மு.க. மீது தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகார்கள்அனைத்தும் பொய்யானவை - மேலும் தி.மு.க.வின் முறைகேடுகளை மூடி மறைக்கவே இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது - தி.மு.க.வினர் உண்மையில், பல்வேறு தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.

1. தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருமதி. கனிமொழி, ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், 100 வாகனங்களுடன் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார் - ஆனால், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

2. தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. உதயசூரியனின் சகோதரி தேன்மொழி மீது, சின்னசேலம் பகுதியில் சேலைகள் விநியோகம் செய்ததாக கருமந்துறை காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது - மேலும், அவரது வாகனத்திலிருந்து 800 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன - ஆனால், இதுதொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

3. தி.மு.க.வைச் சேர்ந்த லெட்சுமணன் மீது வேஷ்டிகள் வழங்கியதாக கருமந்துறை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது - மேலும், 170- வேஷ்டிகள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - இவ்வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்ட லெட்சுமணன் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

4. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிசங்கர் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த இருவர் மீது, தேக்கம்பட்டு, சின்னகல்வராயன்மலை, வடக்குநாடு பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக காரியக்கோவில் சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் அளித்த புகாரின்பேரில், கருமந்துறை நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

5. தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ. வேலு மற்றும் 50 பேர் மீது சின்னகவுண்டாபுரம் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக காரிப்பட்டி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், 21 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுதொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

6. காரிப்பட்டி காவல்நிலையத்தில் தி.மு.க. எம்.பி. ஆதிசங்கர், செல்வகணபதி மற்றும் சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் மீது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 77 ஆயிரத்து 675 ரூபாய் பணமும், அதனை வினியோகித்த இன்நோவா காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாகவும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

7. அம்மாபேட்டை காவல்நிலையத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்தாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு 25 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக குப்புசாமி கைது செய்யப்படவில்லை.

8. ஒட்டன்சத்திரம் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் கண்ணாயிரம் மீது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக வீராணம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரிடமிருந்து 10 ஆயிரத்து 890 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

9. இதேபோன்று, அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களைத் தாக்கியதாக கோவையைச் சேர்ந்த திரு. கே.ஆர். ஜெயராம் கொடுத்த புகாரின்பேரில், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி மற்றும் 20 தி.மு.க.வினர் மீது வீராணம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான புகைப்படங்களையும், முதல் தகவல் அறிக்கைகளையும் இந்த புகாருடன் இணைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர, தும்பை பஞ்சாயத்து பகுதியில் தி.மு.க.வினரால் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுவதை தடுக்க முயன்ற உதவி ஆய்வாளரை, தி.மு.க.வைச் சேர்ந்த தும்பை பஞ்சாயத்து தலைவர் கணேசன் தாக்கி, சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் - தி.மு.க.வினரின் இந்த நடவடிக்கைகளால் தேர்தல் அதிகாரிகள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கி வருகின்றனர் - இதுபோன்ற நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு

1. ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு தி.மு.க.வினரால் பணம் வினியோகம் செய்யப்படுவதை தடுக்க வேண்டும்.

2. ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க.வினரால் வேட்டி - சேலை, மது போன்றவற்றை வாக்காளர்களுக்கு கொடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

3. தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க வேண்டும் என ஏற்காடு தொகுதி வாக்காளர்களை மிரட்டும் தி.மு.க.வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

4. ஏற்காடு இடைத்தேர்தலில் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் வகையில், தேர்தல் விதிமுறைகளை மீறியும், சட்டத்திற்குப் புறம்பாகவும் நடந்துகொள்ளும் தி.மு.க.வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையரிடம் அ.இ.அ.தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்