Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/content/55/10886855/html/makkalkattalai/tamizhagatimes/adminpanel/inc/config.php on line 12
தேசிய அணுமின் கழகத்தில் உள்ள மின் உற்பத்தி ஆலைகள் உற்பத்தியை அதிகரிக்கவும், தமிழகத்திற்கு உரிய மின்சாரத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு வலியுறுத்தல் - Tamizhaga Times
முக்கிய செய்திகள்:
தேசிய அணுமின் கழகத்தில் உள்ள மின் உற்பத்தி ஆலைகள் உற்பத்தியை அதிகரிக்கவும், தமிழகத்திற்கு உரிய மின்சாரத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு வலியுறுத்தல்

தமிழகத்தில் சுமார் 2,500 மெகாவாட் மின்சார இழப்பு ஏற்படுவதற்கு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், தேசிய அனல்மின் நிலைய கழகம், BHEL ஆகியவை செயல்படுத்தி வரும் மின்திட்டங்களில் ஏற்பட்டுள்ள உற்பத்தி நிறுத்தம்தான் காரணம் என்று முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்நிறுவனங்கள் மீண்டும் முழு அளவில் மின்உற்பத்தி செய்து, தமிழக மின்இழப்பை போக்க மத்திய மின்சாரம் மற்றும் நிலக்கரி அமைச்சகத்துக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என்றும், இல்லாவிடில் தமிழகத்தை இருளில் மூழ்கச் செய்ய திட்டமிட்ட சதி நடக்கிறது என தமிழக மக்கள் முடிவு செய்யும் நிலை ஏற்பட்டுவிடும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா, பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் இம்மாதம் 2-வது வாரத்திலிருந்து மின்சார விநியோக நிலைமையில் திடீரென, எதிர்பாராதவிதமாக நேரிட்ட பின்னடைவில் உடனடியாக தலையிடக்கோரி இக்கடிதத்தை எழுதுவதாக தெரிவித்துள்ளார். 2011-ம் ஆண்டு மே மாதம் தாம் முதலமைச்சராக பொறுப்பேற்றபோது தமிழ்நாட்டில் மின்சார நிலைமை மிகவும் மோசமாக இருந்ததை பிரதமர் அறிவார் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, முந்தைய தி.மு.க. அரசு தொலைநோக்கு பார்வையின்றியும் செயல்படாமல் இருந்ததாலும், மின்தேவைக்கும், விநியோகத்துக்கும் இடையே சுமார் 4 ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டு மாநிலம் அப்போது கடுமையான மின்தட்டுப்பாட்டை சந்திக்க வேண்டியிருந்தது - அந்த காலகட்டத்தில், மின்சார நிலைமையை சமாளிக்க கடும் மின்வெட்டுகளை செய்ய வேண்டியிருந்தது - மின்சாரப் பற்றாக்குறையை அகற்ற, தாம் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார் - அதன்படி, புதிய அனல்மின் திட்டங்கள் தொடங்கப்படுவதை விரைவுப்படுத்தவும், அரசுக்கு சொந்தமான அனல்மின் நிலையங்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும், நீண்டகால மற்றும் குறுகிய கால அடிப்படையில் மின்சாரத்தை வாங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன - வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு மின்சாரம் கொண்டு வருவதற்கான திறன் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்றும், இதனால், நாட்டில் மின்உற்பத்தி உபரியாக உள்ள பகுதிகளில் இருந்து, தமிழகம் மின்சாரத்தை வாங்க வசதி ஏற்படும் என்றும் அப்போது பிரதமருக்கு கடிதம் எழுதியதையும் முதலமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தமிழ்நாட்டுக்கு கூடுதல் மின்சாரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் தாம் கோரியிருந்ததாகவும், ஆனால் தமது கோரிக்கைகளுக்கு இதுவரை ஆக்கப்பூர்வமான பதில் கிடைக்கவில்லை என்றும் முதலமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நிலைமை இப்படி இருந்தபோதிலும், தமது அரசு தொடர்ச்சியாகவும், கடுமையாகவும் மேற்கொண்ட அபாரமான முயற்சிகளால் 2013-ம் ஆண்டு ஜுலை மாத வாக்கில் நல்ல பலன் கிடைக்க தொடங்கியது என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், மத்திய அரசின் ஆதரவு இல்லாமல், கடும் மின்சார நெருக்கடியை சமாளித்தது தமிழக அரசின் வியக்கத்தக்க சாதனையாகும் என பெருமிதம் தெரிவித்துள்ளார் - ஜுலை மாதம் முதல் இவ்வாண்டு நவம்பர் மாத மத்தி வரை தமிழகத்தில் மின்துண்டிப்பு ஏதும் செயல்படுத்தப்படவில்லை - கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி சட்டப்பேரவையில் தாம் தாக்கல் செய்த அறிக்கையில், மின்தேவைக்கும், இருப்புக்கும் இடையே உள்ள 4 ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டுவிட்டதாக பெருமிதம் தெரிவித்ததை முதலமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார் - மேலும், மின்விநியோகத்தில் தன்னிறைவு பெறவும், இதன் விளைவாக 2014-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறுவதற்கு தமது அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அந்த அறிக்கையில் பட்டியலிட்டதாகவும், மின்சார நிலைமை மேம்பட்டதால், வீட்டு உபயோக நுகர்வோர்களும், விவசாயிகளும் தொழிற்சாலை நுகர்வோர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும், மின்சார விநியோக நிலைமையை அடியோடு தாம் மாற்றிக்காட்டியதற்காக அவர்கள் அனைவரும் தமது அரசுக்கு புகழாரம் சூட்டியதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், சட்டப்பேரவையில் தாம் அறிக்கை தாக்கல் செய்த பின்னர், மாநிலத்தின் மின்சார நிலைமை வேகமாக மோசமடைந்தது - இதற்கான காரணங்களை உன்னிப்பாக ஆய்வு செய்தால், கூட்டு நிறுவனமான தேசிய அனல்மின் கழகம் உள்ளிட்ட மத்திய அரசின் மின்உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி பற்றாக்குறை ஏற்பட்டதுதான் இதற்கு முக்கிய காரணம் என புலனாகிறது - மேலும், BHEL நிறுவனத்தால் சோதனை உற்பத்தி அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட புதிய அனல்மின் திட்டங்கள் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் விநியோக கழகத்திடம் ஒப்படைக்கப்படாததும் இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது - மத்திய மின்உற்பத்தி நிலையங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களான NTPC, BHEL, இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் இந்திய நிலக்கரி நிறுவனம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் காரணமாகவே சுமார் 2,500 மெகாவாட் அளவுக்கு மின்உற்பத்தி திடீரென எதிர்பாராத வகையில் குறைந்துள்ளது - அண்மையில் சோதனை உற்பத்தியை தொடங்கிய வடசென்னை அனல்மின் நிலைய 600 மெகாவாட் திறன் கொண்ட புதிய 2-வது அலகில், கடந்த 16-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது - இதற்கான காரணம் தெரியவில்லை - இந்த 2-வது அலகு தற்போதும் BHEL நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ளது - இந்த தீ விபத்து காரணமாக, BHEL கட்டுப்பாட்டின் கீழுள்ள சோதனை அடிப்படையிலான 600 மெகாவாட் திறன் கொண்ட புதிய ஒன்றாவது இரட்டை அலகும், உற்பத்தியை தொடங்க முடியாததால், மேலும் சுமார் 600 மெகாவாட் இழப்பு ஏற்பட்டது - NTPC மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழுள்ள TANGEDCO ஆகியவை கூட்டாக தலா 500 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகளில் சென்னை அருகே உள்ள வல்லூரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதமும், இவ்வாண்டு ஆகஸ்ட் மாதமும் உற்பத்தியை தொடங்கின - இந்த அலகுகள் அண்மைக்காலம் வரை சுமார் 800 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வந்தன- இந்திய நிலக்கரி நிறுவனத்தின் துணை நிறுவனமான மகாநதி நிலக்கரி நிறுவனத்தின் Talcher சுரங்கத்திலிருந்து போதுமான நிலக்கரி வழங்கப்படாததால், 500 மெகாவாட் திறன் கொண்ட முதலாவது அலகு கடந்த 14-ம் தேதி முதல் செயல்படவில்லை- மேலும், நிலக்கரி பற்றாக்குறையால் வல்லூர் கூட்டு நிறுவனம் மட்டுமின்றி இந்திய நிலக்கரி நிறுவனத்தின் விநியோகத்தையும், உள்நாட்டு நிலக்கரி விநியோகத்தையும் நம்பியிருக்கும் TANGEDCO-வின் அனல்மின் நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன- இதன் விளைவாக 500 மெகாவாட் அனல்மின் திறன் உள்ளபோதிலும், நிலக்கரி கிடைக்காத காரணத்தால் இந்த கூட்டு நிறுவனம் செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது- எனினும் TANGEDCO-வின் அனல்மின் நிலையங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ள நிலக்கரி இருப்பை கொண்டு நிலைமையை சமாளித்து வருகின்றன என முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கியுள்ளார்.

இந்த நெருக்கடியை மேலும் சிக்கலாக்கும் வகையில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திடமிருந்து தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய ஆயிரத்து 113 மெகாவாட் மின்சாரத்தில் தற்போது 777 மெகாவாட் மட்டுமே கிடைத்து வருகிறது - என்.எல்.சி. நிறுவனத்தின் சில அலகுகளில் வருடாந்திர பராமரிப்பு மற்றும் பழுது நீக்கல் நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்துக்கு 336 மெகாவாட் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது - இதேபோன்று, சென்னை அணுமின் நிலையத்தின் ஒரு அலகும், கைகா அணுமின் நிலையத்தின் ஒரு அலகும் செயல்படாததால், மேலும் 241 மெகாவாட் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது - இது தவிர நாப்தாவை எரிபொருளாக கொண்டு செயல்படும், TANGEDCO-வுடன் இணைக்கப்பட்ட PPN தனியார் நிறுவனமும், இந்தியன் ஆயில் நிறுவனத்திடமிருந்து போதிய நாப்தா கிடைக்காததால் செயல்படாமல் உள்ளது - இந்த நிலை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது - எனவே மத்திய மின்உற்பத்தி நிலையங்கள், தேசிய அனல்மின்சார கழகத்தின் கூட்டு நிறுவனங்கள், BHEL செயல்படுத்தி வரும் திட்டங்கள் நாப்தாவை நம்பியிருக்கும் தனியார் மின் நிறுவனம் ஆகியவற்றின் மூலம் மொத்த மின் இழப்பு சுமார் 2 ஆயிரத்து 500 மெகாவாட்டாக உள்ளது என முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

TANGEDCO-வின் 12 அனல்மின் நிலையங்களும், முழு உற்பத்தியை செய்து வரும் நிலையில், மத்திய மின்உற்பத்தி நிலையங்கள் மற்றும் கூட்டு நிறுவனங்கள் மோசமாக செயல்பட்டு வருவது விந்தையான​நேர்வாகத் தோன்றுகிறது- இதனால், இம்மாதம் முதல் 2 வாரங்கள் வரை மின்துண்டிப்பு ஏதும் இல்லாமல் இருந்த தமிழகத்தில், மீண்டும் இப்போது பரவலாக மின்துண்டிப்பு நேரிட்டுள்ளது - NTPC-யின் நிர்வாகத்தின் கீழுள்ள கூட்டு நிறுவனம் உள்ளிட்ட மத்திய மின்உற்பத்தி நிலையங்களும், BHEL நிறுவனத்தால் சோதனை அடிப்படையில் செயல்பட்டு வரும் மின்உற்பத்தி நிறுவனங்களும் ஒரே சமயத்தில் இவ்வளவு மோசமாக செயல்படுவதை தமிழக மக்களால் நம்ப முடியவில்லை - எனவே மத்திய நிறுவனங்களின் கீழுள்ள மின்உற்பத்தி நிலையங்கள் தங்களது உற்பத்தியை அதிகபட்சமாக உயர்த்தி தமிழகத்துக்கு இழந்த மின்உற்பத்தியை மீண்டும் வழங்க மத்திய மின்சாரம் மற்றும் நிலக்கரி அமைச்சகத்துக்கு உத்தரவிடுமாறு பிரதமரை கேட்டுக்கொள்வதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார் - மத்திய அரசின் கீழுள்ள பொதுத்துறை நிறுவனங்கள் மின்சார உற்பத்தியில் தொடர்ந்து பற்றாக்குறையுடன் செயல்படுவது, தமிழகத்தை இருளில் மூழ்கச் செய்ய திட்டமிட்ட சதி நடக்கிறது என்று தமிழக மக்கள் முடிவு​செய்யும் நிலைக்கு கொண்டு சென்றுவிடும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்