முக்கிய செய்திகள்:
உலக சதுரங்க வாகையர் போட்டிக்கான பரிசளிப்பு விழா - மேக்னஸ் கார்ல்சனுக்கு தங்கக்கோப்பையும், முன்னாள் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்துக்கு வெள்ளிப் பதாகையும், முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்

"FIDE" உலக சதுரங்க வாகையர் போட்டியில் பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்ற நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனுக்கு, உலக சதுரங்க வரலாற்றில் முதல்முறையாக தங்க முலாம் பூசப்பட்ட வெற்றிக் கோப்பை மற்றும் 9 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை முதலமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இன்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வழங்கி கவுரவித்தார். மேலும், நீலகிரி மலைச்சரிவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆலிவ் இலைகளால் ஆன பிரத்யேக மாலையையும் கார்ல்சனிடம் முதலமைச்சர் வழங்கினார். இந்த போட்டியில் 2-ம் இடம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் உலகச் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்கு வெள்ளிப் பதாகை மற்றும் 6 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

தமிழகத்தில், இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை வளர்ப்பதற்காக முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, நடப்பாண்டிற்கான உலக சதுரங்க வாகையர் போட்டியை இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் நடத்த ஏற்பாடு செய்து, அதற்காக, முதலமைச்சர் ஜெயலலிதா, 29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து, "FIDE" உலக சதுரங்க வாகையர் போட்டி-2013-ன் தொடக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. முதலமைச்சர் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, உலக சதுரங்க வாகையர் போட்டியினைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். எந்த விளையாட்டு வீரர் எந்த வண்ணக் காயை தேர்ந்தெடுத்து விளையாடுவார் என்பதையும் குலுக்கல் முறையில் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்ந்தெடுத்தார்.

இதனைத்தொடர்ந்து, உலக செஸ் சாம்பியனான தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த்,-தரவரிசையில் உலகின் முதல்நிலை சதுரங்க வீரரான, நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் இடையே, கடந்த 9-ம் தேதி முதல் போட்டி நடைபெற்று வந்தது. மொத்தம் 12 சுற்றுகளைக் கொண்ட இந்த உலக வாகையர் சதுரங்கப் போட்டியில், ஆறரை புள்ளிகளை பெற்று மேக்னஸ் கார்ல்சன் முதன் முறையாக உலக சதுரங்க வாகையர் பட்டத்தை வென்றார். இந்தப் போட்டிக்கான பரிசளிப்பு விழா, சென்னையில் இன்று நடைபெற்றது.

இவ்விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள வருகைதந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சாலையின் இரு மருங்கிலும் பெருந்திரளாக கூடியிருந்த சதுரங்க ஆர்வலர்களும், கழக தொண்டர்களும், பொதுமக்களும் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். பல்வேறு இசைக்கருவிகளும், இசைக்கப்பட்டு முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விழா நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த முதலமைச்சருக்கு, தலைமைச் செயலாளர் திருமதி ஷீலாபாலகிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளர் திரு.முகமது நசிமுதின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் - செயலர் பொறுப்பு வகிக்கும் திரு.கே.ராஜாராமன், FIDE அமைப்பின் பிரதிநிதி திரு.வி.ஹரிஹரன் ஆகியோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்தும், ஃபிடே பாடலும் இசைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, விழா நடைபெறும் மேடைக்கு வருகைதந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை, FIDE அமைப்பின் தலைவர் வரவேற்றார். தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் FIDE பாடல் இசைக்கப்பட்டு பரிசளிப்பு விழா இனிதே தொடங்கியது. முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அகில இந்திய சதுரங்க விளையாட்டு சம்மேளனத்தின் தலைவர் திரு.J.C.D. பிரபாகர் பூங்கொத்து வழங்கினார்.

இதன் பின்னர், FIDE அமைப்பின் தலைவர் இல்யூம் ஷினோவுக்கு, தமிழ்நாடு சதுரங்க விளையாட்டு சங்கத்தின் தலைவர் திரு.P.R.வெங்கட்ராமராஜா பூங்கொத்து வழங்கினார். இந்த விழாவில், உலக சதுரங்க வாகையர் போட்டி-2013-ல் இரண்டாம் இடம் பிடித்த விஸ்வநாதன் ஆனந்த்துக்கு FIDE அமைப்பின் தலைவர் திரு. கிர்சான் இல்யும்ஷினோவ் வெள்ளிப்பதக்கம் அணிவித்தார். இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதா, விஸ்வநாதன் ஆனந்த்துக்கு ஒரு கிலோ 359 கிராம் எடையுள்ள வெள்ளிப் பதாகையை வழங்கினார்.

உலக சதுரங்க வாகையர் பட்டத்தை வென்ற நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுக்கு, FIDE அமைப்பின் தலைவர் திரு. கிர்சான் இல்யும்ஷினோவ் தங்கப்பதக்கம் வழங்கினார். முதலமைச்சர் ஜெயலலிதா, மேக்னஸ் கார்ல்சனுக்கு நீலகிரி மலைச்சரிவிலிருந்து பிரத்யேகமாக எடுத்துவரப்பட்ட ஆலிவ் இலைகளால் ஆன மாலையை அணிவித்தார். இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் இடம் பிடித்த விஸ்வநாதன் ஆனந்த்துக்கு 6 கோடியே 3 லட்சம் பரிசுத்தொகைக்கான காசோலை வழங்கி சிறப்பித்தார்.

பின்னர், உலக சதுரங்க வரலாற்றில் முதல் முறையாக 3 புள்ளி ஐந்து ஒன்று கிலோ எடைகொண்ட தங்க முலாம் பூசப்பட்ட வெற்றிக் கோப்பையை மேக்னஸ் கார்ல்சனுக்கு, பலத்த கரஒலிக்கிடையே முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கி பாராட்டு தெரிவித்தார். முதலமைச்சர் ஜெயலலிதா, உலக சதுரங்க வாகையர் போட்டி - 2013-ல் வெற்றி பெற்ற நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனுக்கு 9 கோடியே 90 லட்சம் ரூபாய் பரிசுத்தொகைக்கான காசோலை வழங்கி கெளரவித்தார். நிறைவாக, நார்வே நாட்டின் தேசியப் பண்ணும், இந்திய தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்