முக்கிய செய்திகள்:
இலங்கைச் சிறைகளில் வாடும் 80 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் கடிதம்

உலக மீன்பிடி தினமான கடந்த 21-ம் தேதி, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 20 மீனவர்களையும், ஏற்கெனவே இலங்கைச் சிறைகளில் வாடும் 60 மீனவர்களையும், இலங்கை அதிகாரிகள் கையகப்படுத்தி வைத்துள்ள 47 இந்திய மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கிற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு மெத்தனமாகவும், கோழைத்தனமாகவும் செயல்படுவதால், மேலும் மேலும் நமது மீனவர்களை சட்ட விரோதமாக கைது செய்வது, சிறையில் அடைப்பது போன்ற செயல்களை இலங்கை கடற்படையினர் துணிச்சலுடன் செய்து வருவதாகவும் முதலமைச்சர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், உலக மீன்பிடி தினமான கடந்த 21-ம் தேதியன்று, தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்பாவி இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் சட்டவிரோதமாக கடத்திச் சென்ற சம்பவத்தை, பிரதமரின் கவனத்திற்கு மீண்டும் வேதனையுடன் கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த பிரச்சனையை மத்திய அரசு உணர்வுபூர்வமாக அணுகாததால், தங்களது வாழ்வாதாரத்திற்காக பாரம்பரியமாக தமிழக மீனவர்கள் மீன் பிடித்து வரும் பகுதிகளில், இலங்கை கடற்படையினர் அடிக்கடி தொடர்ந்து மூர்க்கத்தனமாக தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர் - இந்த பிரச்சனையில் மத்திய அரசு மெத்தனமாகவும், கோழைத்தனமாகவும் செயல்படுவதால், மேலும் மேலும் நமது மீனவர்களை சட்ட விரோதமாக கைது செய்வது, சிறையில் அடைப்பது போன்ற செயல்களை இலங்கை கடற்படையினர் தைரியமாகச் செய்து வருகின்றனர் - கடந்த 21-ம் தேதியன்று, பாக் நீரிணையில் பாரம்பரியமாக தாங்கள் மீன்பிடித்து வரும் இடங்களில் 5 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 20 ஏழை அப்பாவி மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் மூர்க்கத்தனமாகக் கடத்திச் சென்ற தற்போதைய சம்பவத்தை பிரதமரது கவனத்திற்குக் கொண்டு வர விரும்புவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜெகதாபட்டணம் மற்றும் கோட்டைப்பட்டணத்திலிருந்து கடந்த 20-ம் தேதி, 20 மீனவர்கள், தங்களது 5 இயந்திர மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்க சென்றனர் - பாரம்பரியமாக தாங்கள் மீன்பிடிக்கும் இடத்தில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் கடந்த 21-ம் தேதி அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் -உலக மீனவர் சமுதாயமே, மீன்பிடி தினத்தைக் கொண்டாடும் மனநிலையில் இருந்தபோது, இந்தக் கொடூரமான செயலை இலங்கைக் கடற்படையினர் செய்ததன் மூலம், அப்பாவி மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் மீது​ சோக இருளைப் பாய்ச்சியிருக்கிறார்கள் என்று வேதனையுடன் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக் கடற்படையின் இந்த அடாவடிச் செயல்கள் குறித்து இலங்கை அரசிடம், இந்திய அரசு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருப்பதாலும், ராஜீய ரீதியில் நெருக்கடி கொடுக்காமல் இருப்பதாலும், நீ்ண்ட காலமாக தமிழக மீனவர்கள் கடத்தப்படுவது - நீண்டகாலம் சிறையில் அடைக்கப்படுவது போன்ற சம்பங்கள், தற்போது பல்கிப் பெருகி உள்ளன - பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்களின் முக்கிய வாழ்வாதாரத்தை பாதிக்கும் இத்தகைய பிரச்னை பின்னுக்கு தள்ளப்பட்டு, இந்திய மற்றும் இலங்கை மீனவர் சங்கங்களே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக்கொள்ளும் நிலை எழுந்துள்ளது- பாக் நீரிணையில் நிகழும் இந்தப் பிரச்சனைகளை கையாள இயலாமல், மத்திய அரசு தொடர்ந்து உணர்வுபூர்வமற்ற வகையில் செயல்படாதிருப்பதால் - தாங்கள் மத்திய அரசால் கைவிடப்படுவதாகவும், தனிமைப்படுத்தப்படுவதாகவும் தமிழக மீனவர்கள் உணர்கிறார்கள் என்றும், அதில் நியாயம் இருக்கிறது என்றும் முதலமைச்சர் குறப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே 60 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை அரசால் விடுதலை செய்யப்படாமல், சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் சம்பவங்களோடு, கடந்த 21-ம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தையும் தங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக மீனவர்களின் 42 மீன்பிடிப் படகுகளும் இன்னும் திருப்பித் தரப்படாமல் இருப்பது, அந்த ஏழை மீனவர்களுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தக்கூடியது - எனவே, இந்தப் பிரச்சனைகளில் பிரதமர் நேரடியாகத் தலையிட்டு, மத்திய அரசின் உயர்ந்தபட்ச ராஜீய வழிமுறைகளைப் பயன்படுத்தி, ஏற்கெனவே சிறையில் உள்ளவர்களோடு, கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ள 20 மீனவர்களையும் சேர்த்து மொத்தம் 80 பேரையும், இலங்கை அதிகாரிகள் கையகப்படுத்தி வைத்துள்ள 47 இந்திய மீன்பிடி படகுகளையும் விடுவிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்