முக்கிய செய்திகள்:
அண்ணா பல்கலைக் கழக 34-வது பட்டமளிப்பு விழா - தலைமை விருந்தினராகப் பங்கேற்று, பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார் முதலமைச்சர் ஜெயலலிதா

அண்ணா பல்கலைக்கழக 34-வது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக கலந்துகொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா, பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார்.

அண்ணா பல்கலைக் கழகத்தின் 34-வது வருட பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று நண்பகல் 12.15 மணிக்கு நடைபெற்றது. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்க நுழைவாயிலில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, அண்ணா பல்கலைக்கழக இணைவேந்தரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான திரு.P.பழனியப்பன், தலைமைச் செயலாளர் திருமதி.ஷீலா பாலகிருஷ்ணன், பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் M.ராஜாராம், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் திரு. அபூர்வ வர்மா, சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு.தாண்டவன் உள்ளிட்டோர் மலர்கொத்து வழங்கி வரவேற்றனர்.

பட்டமளிப்பு விழாவில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் M.ராஜாராம் வரவேற்புரையாற்றி அறிக்கை சமர்ப்பித்தார். இதன் தொடர்ச்சியாக, விழாவுக்கு தலைமை வகித்த தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான முனைவர் கே.ரோசய்யா, பட்டமளிப்பு நிகழ்வினை தொடங்கி வைத்தார். தலைமை விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா, பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார்.

இவ்விழாவில் பொறியியல் துறையில் 690 பேருக்கு முனைவர் பட்டமும், B.E., B.Tech. B.Arch. போன்ற படிப்புகளில் சிறந்து விளங்கிய 114 பேருக்கு தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. இதன் அடையாளமாக 25 மாணவ, மாணவியருக்கு, பதக்கங்களையும், பரிசுகளையும் ஆளுநர் முனைவர் கே.ரோசய்யா வழங்கினார். ஆளுநருக்கும், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதன் பின்னர், ஆளுநர் மற்றும் முதலமைச்சருடன், மாணவ, மாணவியர், குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இவ்விழாவில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாணவ, மாணவியர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்