முக்கிய செய்திகள்:
12-ம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கான வினாவங்கி மற்றும் மாதிரி வினா ஏடுகள், மாநிலம் முழுவதும் விற்பனை

12-ம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கான வினாவங்கி மற்றும் மாதிரி வினா ஏடுகள், முதன் முறையாக, மாநிலம் முழுவதும் இன்று முதல் விற்பனை செய்யப்படுகின்றன.

12-ம் வகுப்பு தேர்வில் மாணவ - மாணவிகள் அதிக மதிப்பெண் எடுப்பதற்காக, ஏற்கெனவே நடைபெற்ற பொதுத்தேர்வுகளின் வினா மற்றும் அவற்றுக்கான விடைகள், மற்றும் தீர்வுப் புத்தகங்களை, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் அச்சிடப்பட்டு, குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம். தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் தயாரிக்கும் இந்தப் புத்தகங்கள், இதுவரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. தமிழகத்தில் பிற மாவட்டங்களில் உள்ள மாணவ - மாணவிகள் சிரமமின்றி, மாதிரி வினாவிடை புத்தகங்களைப் பெற ஏதுவாக, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் புத்தக விற்பனையை பள்ளிக்கல்வித்துறை இந்த ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. 10-ம் வகுப்புக்கான மாதிரி வினாவிடை புத்தகங்கள் கடந்த மாதம் 24-ம் தேதி முதல், மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டது. அதுபோலவே, 12-ம் வகுப்புக்கான மாதிரி வினா விடை புத்தகங்கள் இன்று முதல், சென்னையில் நுங்கம்பாக்கம் உட்பட 5 இடங்களிலும், பிற மாவட்டங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு மாணவ - மாணவிகள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது. மாதிரி வினாவிடை புத்தகங்கள் மாநிலம் முழுவதும் குறைந்து விலைக்கு விற்பனை செய்யப்படுவது பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்