முக்கிய செய்திகள்:
தொடர்ந்து 10-வது முறையாக இடிந்து விழுந்தது, சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை மற்றும் கண்ணாடிகள்

சென்னை விமான நிலையம், மத்திய அரசின் விமான நிலைய ஆணையகத்தால் புதுப்பிக்கப்பட்ட பின்னர், தொடர்ந்து, 10-வது முறையாக, மேற்கூரை மற்றும் கண்ணாடிக் கதவுகள் நொறுங்கி விழுந்துள்ளன. உள்நாட்டு முனையத்தின் வருகைப் பகுதியில் கண்ணாடிக் கதவு திடீரென நொறுங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலையம், மத்திய அரசின் விமான நிலைய ஆணையகத்தால் புதுப்பிக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாத இறுதியில் புதிய கட்டடங்கள் திறந்துவைக்கப்பட்டன. 6 மாதத்திற்குப் பின்னர், இப்பகுதி, பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்தப் புதிய கட்டடங்களின் மேற்கூரைகள் 6 முறை அடுத்தடுத்து இடிந்து விழுந்தன. இதனால், பயணிகளிடையே அச்சம் நிலவியது. மேலும், புதிய கட்டடங்களின் கண்ணாடிக் கதவுகள் நொறுங்கி விழும் சம்பவங்களும் தொடர்கின்றன. ஏற்கனவே 3 முறை கண்ணாடிகள் உடைந்துவிழுந்த நிலையில், 4-வது சம்பவம் நடைபெற்றது. விமான நிலையத்தின் புதிய உள்நாட்டு முனையத்தின் 3-வது நுழைவு வாயில் வருகை பகுதியில், திடீரென கண்ணாடிக் கதவுகள் நொறுங்கி விழுந்தன.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு, உள்நாட்டு முனையத்தின் புறப்பாடு பகுதியில் கண்ணாடிக் கதவுகள் நொறுங்கி விழுந்த சம்பவம் குறித்து, டெல்லியிலிருந்து வந்துள்ள மத்திய அரசு உயரதிகாரிகள் விசாரணை நடத்திக்கொண்டிருந்த போதே, 3-வது நுழைவு வாயிலின் வருகைப் பகுதியில் கண்ணாடி கதவுகள் நொறுங்கி விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணி காரணமாக, பயணிகளின் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நேரத்தில், கண்ணாடிக் கதவுகள் நொறுங்கி விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சென்னை விமான நிலையம் புதுப்பிக்கப்பட்ட பின்னர், தற்போது 10-வது முறையாக இதுபோன்ற விபத்து நிகழ்ந்திருப்பதற்கு மத்திய அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் என விமானப் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் செய்திகள்