முக்கிய செய்திகள்:
லட்சத்தீவு கடற்பகுதியில் நிலைகொண்டுள்ளது காற்றழுத்த தாழ்வு பகுதி : அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி, நாகை அருகே நேற்று முன்தினம் கரையை கடந்தது. பின்னர், இந்த தாழ்வு மண்டலம், வலுவிழந்த மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நாகை மாவட்டத்தில், மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி, குத்தாலம், வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. இந்த மழையால் பயிர்களை தாக்கும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, நேற்று முன்தினம் நாகை அருகே புயல் கரையை கடந்தபோது, பலத்த காற்று காரணமாக தரையில் சாய்ந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, கொடநாட்டில் 7 சென்டி மீட்டரும், சென்னை, ஆரணி, செங்கோட்டையில் தலா 4 சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்