முக்கிய செய்திகள்:
சென்னையில் அடுத்த மாதம் நடைபெறும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிக்கு ரூ.2 கோடி நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

சென்னை நுங்கம்பாக்கத்தில் அடுத்த மாதம் 30ம் தேதி தொடங்கி நடைபெறவுள்ள சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிக்கு, இந்த ஆண்டும் "Lead Platinum Sponsor" என்ற வகையில், 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், 2014, 2015, 2016 ஆண்டுகளில் இப்போட்டிகளை தொடர்ந்து சிறப்பாக நடத்த 2 கோடி ரூபாய் வழங்கிடவும், முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அறிவார்ந்த, ஆரோக்கியமான இளைய சமுதாயம் உருவாகிட கல்வி, விளையாட்டு ஆகிய இரண்டிலும் இளைஞர்கள் அதிக கவனம் செலுத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா, தமிழகத்தில் விளையாட்டுத் துறைக்கும் அதிக அளவில் முக்கியத்துவம் வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு விடுதிகள் துவக்குதல், தினப்பயிற்சி திட்டத்தின் மூலம் வீரர்களுக்கு முழுமையான பயிற்சி அளித்தல், பன்னாட்டு போட்டிகளில் பங்கு கொள்வதற்காக பன்னாட்டு தரத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைத்தல், பன்னாட்டு போட்டிகளில் பங்கு கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத் தொகை வழங்குதல், உள்விளையாட்டு அரங்குகளை அமைத்தல் போன்ற எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது - உலகப் புகழ் பெற்ற டென்னிஸ் வீரர்கள் பங்கு பெறும் வகையில் சர்வதேச தரத்திலான டென்னிஸ் விளையாட்டரங்கம் ஒன்று சென்னையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின், முந்தைய ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டது - இந்த விளையாட்டு அரங்கில் தெற்காசியாவில் நடைபெறும் முக்கிய போட்டியான சென்னை ஓபன் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன - இந்தப் போட்டிகளை நடத்திட முதலமைச்சர் ஜெயலலிதா, 2005 ஆம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கினார் - 2012-2013 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியினை சிறப்பாக நடத்த அதிக அளவு நிதி உதவியினை தமிழக அரசு அளித்து உதவ வேண்டும் என்று தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சென்ற ஆண்டு அளித்த கோரிக்கையினை ஏற்று, நிதி உதவித் தொகையை 1 கோடி ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். மேலும் பன்னாட்டு அளவிலான டென்னிஸ் போட்டிகள் நடத்துவதற்கு வசதியாக சென்னை டென்னிஸ் விளையாட்டரங்கை மேம்படுத்துவதற்காக ஏற்கெனவே 4 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆண்டும் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய டென்னிஸ் விளையாட்டு அரங்கில் அடுத்த மாதம் 30ம் தேதி முதல் ஜனவரி 5 வரை நடைபெற உள்ள சென்னை ஓப்பன் டென்னிஸ் போட்டிக்கு 'Lead Platinum Sponsor' என்ற வகையில் 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்றும், மேலும் 2014, 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளிலும் இப்போட்டிகளை தொடர்ந்து சிறப்பாக நடத்திட 2 கோடி ரூபாய் வழங்கிடவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்றும் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்