முக்கிய செய்திகள்:
திருவண்ணாமலையில் நாளை மறுநாள் கார்த்திகை தீபத் திருவிழா - முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் 2,500 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு

திருவண்ணாமலையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள தீபத் திருவிழாவை​முன்னிட்டு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உத்தரவின்படி, தமிழகம் முழுவதிலும் இருந்து 2,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 8-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய திருவிழாவான 10-ம் நாள் திருவிழா நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு திருக்கோவிலின் கருவறை முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படவுள்ளது. தீபத் திருவிழாவை காண்பதற்கு ஏறத்தாழ 30 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உத்தரவின்படி, மாநிலம் முழுவதிலும் இருந்து 2,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக பொது மேலாளர் திரு.வின்சென்ட் தெரிவித்துள்ளார்.

மேலும், பக்தர்களின் வசதிக்காக நகருக்கு வரும் 9 சாலைகளிலும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நடமாடும் கழிவறைகள், மின்விளக்கு வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதை தவிர கிரிவலம் வரும் பக்தர்களுக்காக கிரிவலப் பாதையில் 14 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு தேவையான மருந்துகள் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ளன. மேலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவிழாவை முன்னிட்டு கோவிலை சுற்றி சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகளை அளிப்பதற்காக புறக்காவல் நிலையங்களும், காவலர் தங்கு​மிடங்களும் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்