முக்கிய செய்திகள்:
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாகை அருகே நாளை கரையைக் கடக்கிறது - கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாகப்பட்டினம் அருகே நாளை கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பலத்த காற்றுடன் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில், அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் கடல் பகுதிக்கு அருகே சில நாட்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தற்போது நாகப்பட்டினத்தில் இருந்து 420 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு 45 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என்றும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்களில் இன்றிரவு முதலே கனமழை பெய்யத் தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை நாகை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை காரணமாக, கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கடலூரில் மீனவர்கள் தங்களுடைய விசைப்படகுகள் மற்றும் ஃபைபர் படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்திவைத்துள்ளனர். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை, எண்ணூர், நாகப்பட்டினம், கடலூர், தூத்துக்குடி, பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில், மீட்புப் பணிகளில் ஈடுபட 16 பேரிடர் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பாக தங்கவைக்க பள்ளிகள் மற்றும் சமுதாயக் கூடங்கள் ஆயத்த நிலையில் உள்ளதாகவும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்