முக்கிய செய்திகள்:
இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்துகொள்ளக் கூடாது - தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றம்

தமிழக மக்களின் ஒருமித்த கருத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, இலங்கை காமன்வெல்த் மாநாட்டில், பெயரளவுக்குக் கூட இந்தியா சார்பில் யாரும் கலந்துகொள்ளக் கூடாது என்றும், இந்த மாநாட்டினை இந்தியா முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசினர் தீர்மானத்தை, முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் முன்மொழிந்தார். இலங்கை காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்க வழிவகுத்துள்ள மத்திய அரசின் முடிவு, தமிழர்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பதற்கு சமம் என்றும், மத்திய அரசின் இந்த முடிவை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதிபடத் தெரிவித்தார். இலங்கை காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்துகொண்டால், இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை, இந்தியா அங்கீகரிக்கிறது என்ற நிலைதான் உருவாகும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சிறப்புக் கூட்டம் மாலை கூடியது. பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவை, சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு. ப. தனபால் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார். தொடர்ந்து, அவை முன்னவரும், நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம், சட்டப் பேரவை துணைத்தலைவர் திரு. பொள்ளாச்சி ஜெயராமன், அரசு தலைமைக் கொறடா திரு. ஆர். மனோகரன், சட்டப்பேரவைச் செயலாளர் திரு. A.M.P. ஜமாலுதீன் ஆகியோர் மலர்க்கொத்துகள் வழங்கி, முதலமைச்சரை வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து, மாலை 6 மணிக்கு சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது. இன்றையக் கூட்டத்தின் ஒரே நிகழ்ச்சியாக, இலங்கை காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசினர் தீர்மானத்தை, முதலமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்தார். இலங்கைத் தமிழர் நலன் காக்க, தொடர்ந்து குரல் கொடுத்துவரும் அரசு, தமது தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசுதான் என உறுதிபடத் தெரிவித்த முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக முதலமைச்சராக 3-வது முறையாக, தாம் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, இலங்கைத் தமிழர் நலனுக்காக, தமிழக சட்டப்பேரவையில் தாம் முன்மொழிந்து நிறைவேற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க 3 தீர்மானங்கள் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை, இந்தியா முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமருக்கு, தொடர்ந்து, தாம், கடிதங்கள் எழுதியது பற்றியும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், உணர்வுப்பூர்வமான இலங்கைத் தமிழர்கள் பிரச்னையை, அறிவுப்பூர்வமாக சிந்தித்து நிறைவேற்றப்பட்டதாகவும், இவை, உணர்ச்சிவயப்பட்டு, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அல்ல என்றும் எடுத்துரைத்த முதலமைச்சர் ஜெயலலிதா, இதுநாள் வரை தமிழர்களுக்கு சாதகமான எந்தவொரு முடிவையும் மத்திய அரசு எடுக்கவில்லை என தெரிவித்தார். மாறாக, தமிழினப் படுகொலையை நிகழ்த்திய சிங்கள இனவாத அரசு, கொழும்பு நகரில் நடத்தும் காமன்வெல்த் மாநாட்டில், பாரதப் பிரதமருக்கு பதிலாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்பார் என மத்திய அரசு அறிவித்திருப்பது, தமிழர்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பதற்கு சமமாகும் என்றும், மத்திய அரசின் இந்த முடிவை, தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதிபடத் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தின் வாசகங்களை எடுத்துரைத்த முதலமைச்சர் ஜெயலலிதா, காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதன் மூலம், இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை இந்தியா ஏற்றுக்கொள்கிறது - அங்கீகரிக்கிறது என்ற நிலைதான் உருவாகும் என எச்சரித்தார். தமிழக மக்களின் ஒருமித்த கருத்துக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, இலங்கை காமன்வெல்த் மாநாட்டில், பெயரளவுக்குக் கூட இந்தியா சார்பில் யாரும் கலந்துகொள்ளக் கூடாது என்றும் இந்த மாநாட்டை இந்தியா முற்றிலுமாகப் புறக்கணிக்கவேண்டும் என்றும் மத்திய அரசை, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக, முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை, சட்டப்பேரவையின் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வரவேற்றும், பாராட்டியும் பேசினார்கள்.

தீர்மானம் நிறைவேறியது

முதலமைச்சர் ஜெயலலிதாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம், சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

இலங்கை காமன்வெல்த் மாநாட்டில், பெயரளவுக்குக்கூட இந்தியா சார்பில் யாரும் கலந்துகொள்ளக் கூடாது என்றும், இந்த காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்றும், மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.

மேலும் செய்திகள்