முக்கிய செய்திகள்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையம், உட்பட 9 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்

முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார். மேலும், பழங்குடி இனத்தவருக்கென 4 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் உட்பட 8 புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களையும் துவக்கி வைத்தார்.

இளைஞர்கள் தொழிற் பயிற்சி பெற்று வேலைக்கேற்ற திறனுடன் தகுதியான வேலைவாய்ப்பினைப் பெற வேண்டும்- இதன் மூலம் அவர்களது சமூகப் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதே முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் உயரிய நோக்கமாகும் - தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை-எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ-மாணவியரின் நலனுக்காகவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும், தொழில் திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்குவதற்காகவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 62 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.

இந்தத் தொழிற்பயிற்சி நிலையங்களில் பெரும்பாலும், ஏழை-எளிய மற்றும் சமூகப் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ-மாணவியர்கள் அதிக அளவில் பயின்று வருகின்றனர் - முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட தொலைநோக்குத் திட்டம் 2023-ல் குறிப்பிட்டுள்ள இலக்குகளை பூர்த்தி செய்ய தொழில் திறன் பெற்றவர்களின்தேவை அதிகரித்து வருகிறது - எனவே, தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து கல்வி பயில விரும்பும் மாணாக்கர்களின் விருப்பத்தினை நிறைவு செய்யும் வகையிலும், தமிழ்நாட்டில் திறன் மிகுந்த தொழிலாளர்களின் தேவையினை ஈடு செய்யவும், பல்வேறு காரணங்களினால் உயர்கல்வியினைத் தொடர இயலாத மாணவ-மாணவிகள், தொழிற் பயிற்சி பெற்று அதன் மூலம் தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள துணை செய்யவும், இத்தகைய தொழிற் பயிற்சி நிலையங்கள், ஆங்காங்கே தொடங்கப்படவேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, பழங்குடி இனத்தவர் வாழும் பகுதிகளில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் உட்பட 10 தொழிற்பயிற்சி நிலையங்கள் நடப்பாண்டில் துவங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் - திருவையாறு; தேனி மாவட்டம் - போடி; விருதுநகர் மாவட்டம் - அருப்புக்கோட்டை; திருநெல்வேலி மாவட்டம் - ராதாபுரம்; தூத்துக்குடி மாவட்டம் - வேப்பலோடை ஆகிய இடங்களில் 5 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் - திருவண்ணாமலை மாவட்டம் - ஜமுனாமரத்தூர்; கோயம்புத்தூர் மாவட்டம் - ஆனைக்கட்டி; நாமக்கல் மாவட்டம் - கொல்லிமலை; நீலகிரி மாவட்டம் - கூடலூர் ஆகிய இடங்களில் பழங்குடி இனத்தவருக்கென 4 புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள்- என மொத்தம் 9 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார் - இந்தப் புதிய தொழிற்பயிற்சி நிலையங்களுக்குப் புதிய கட்டடம் கட்டுதல், இயந்திரங்கள் மற்றும் கருவிகள் கொள்முதல் செய்தல் ஆகியவற்றிற்காக பழங்குடி இனத்தவர் வாழும் பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ள புதிய தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு 24 கோடியே 50 லட்சம் ரூபாயும், பிற தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு 26 கோடியே 39 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் ஒவ்வொன்றும் தலா ஐந்து தொழிற் பிரிவுகளில் தொழிற் பயிற்சிகள் வழங்கும் வகையிலும், தலா 200 மாணவ-மாணவிகள் பயிற்சி பெறும் வசதிகளைக் கொண்டதாகவும் செயல்படும்- மேலும், இந்த தொழிற் பயிற்சி நிலையங்களில் மெரைன் இன்ஜின் ஃபிட்டர், ஏ.சி. மெக்கானிக், வெல்டர், வயர்மேன், ஃபேஷன் டெக்னாலஜி, மோட்டார் வாகன மெக்கானிக், ஃபிட்டர், எலக்ட்ரிஷியன், இலகுரக மோட்டார் வாகன பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல், லிஃப்ட் மெக்கானிக், டர்னர், பிளம்பர், டீசல் மெக்கானிக் மற்றும் டைலரிங் ஆகிய பாடப் பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ஆர்.வைத்திலிங்கம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு.கே.டி. பச்சைமால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு.என்.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் திருமதி. ஷீலா பாலகிருஷ்ணன், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை முதன்மைச் செயலாளர் திரு.​மோகன் பியாரெ, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் திரு.கோ. பிரகாஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்