முக்கிய செய்திகள்:
தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றங்கள் - நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு கூடுதலாக பொதுப்பணித்துறை ஒதுக்கீடு - அமைச்சர் கே.வி. ராமலிங்கத்திற்கு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை, கே.சி. வீரமணி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

தமிழக அமைச்சரவையில், சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. நிதியமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வத்திற்கு, கூடுதலாக, பொதுப்பணித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா பரிந்துரையின்பேரில், தமிழக அமைச்சரவையில், இலாகா மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக, ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அமைச்சர் திரு. கே.வி. ராமலிங்கத்திடம் இதுவரை இருந்த, பொதுப்பணித்துறை, சிறுபாசனம் உள்ளிட்ட நீர்ப்பாசனத்துறை, திட்டப்பணிகள் ஆகிய இலாகாக்கள், நிதியமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. திரு. ஓ. பன்னீர்செல்வம், நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகிப்பார்.

அமைச்சர் திரு. கே.சி. வீரமணி, இதுவரை வகித்துவந்த விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை, அமைச்சர் திரு. கே.வி. ராமலிங்கத்திற்கு வழங்கப்படுகிறது. திரு. கே.வி. ராமலிங்கம், இனி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகிப்பார்.

அமைச்சர் திரு. கே.சி. வீரமணியிடம், பள்ளிக்கல்வி, தொல்லியல், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாடு ஆகிய இலாகாக்கள் இருக்கும். அவர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சராகப் பதவி வகிப்பார்.

மேலும் செய்திகள்