முக்கிய செய்திகள்:
சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் கால்பந்தாட்ட ஆடுகளம், தடகள ஆடுகளங்கள், விளையாட்டு விடுதிகள் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

முதலமைச்சர் யலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் 27 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், செயற்கை இழை ஓடுதளம், கால்பந்தாட்ட ஆடுகளம் மற்றும் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளையும், புதிதாக அமைக்கப்பட்ட செயற்கை இழை ஓடுதளம், தடகள விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆடுகளங்கள், விளையாட்டு விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும், காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்குமிடத்திற்கு முதலமைச்சர் யலலிதா அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தி, சிறந்த பயிற்சி அளித்து அவர்களை தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க செய்தல், பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பவர்களுக்கு ஊக்கத் தொகை அளித்தல், பன்னாட்டு தரத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைத்தல், உள் விளையாட்டு அரங்குகளை அமைத்தல், போன்ற பல்வேறு முனைப்பான திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்திட 1992-ஆம் ஆண்டு உலகத்தரம் வாய்ந்த ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கினை 44 கோடி ரூபாய் செலவில் முதலமைச்சர் யலலிதா தலைமையிலான அரசு குறுகிய காலத்தில் அமைத்தது. இவ்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டதன் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உலகத்தரம் வாய்ந்த செயற்கை இழை ஓடுகளத்தில் பயிற்சி பெற்று பல்வேறு நாடுகளில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக செயல்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த செயற்கை இழையிலான 8 ஓடுதள பாதைகள்; 47 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த இயற்கை புல்வெளி கால்பந்தாட்ட மைதானம்; 37 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மின் தூக்கிகள்; 1 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த புதிய உள்ளரங்கு செயற்கை இழை ஓடுதள பாதை; 50 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள தார்சாலைகள்; 3 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள 2000 வாட் மின்னொளி விளக்குகள்; 40 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள புதிய ஒலிப்பெருக்கி சாதனங்கள்; 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி; 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஊடகப் பிரதிநிதிகளுக்கான புதிய அரங்கு; 6 கோடியே 98 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அறைகள், என மொத்தம் 17 கோடியே 80 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை ஓடுதளம், கால்பந்தாட்ட ஆடுகளம் மற்றும் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை முதலமைச்சர் யலலிதா இன்று திறந்து வைத்தார்.

மேலும், ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கின் அருகில் 9 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பயிற்சி பெறுவதற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த 8 வரிசை கொண்ட செயற்கை இழை ஓடுதளப் பாதை; குண்டெறிதல், வட்டெறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தத்தித் தாண்டுதல், கோல் ஊன்றித் தாண்டுதல், ஈட்டி எறிதல் ஆகியவற்றிற்கான தனித் தனி ஆடுகளங்கள் ; இயற்கை புல்வெளி கால்பந்தாட்ட மைதானம் ; மின்னொளி கோபுரங்கள் ; பெண்களுக்கான விளையாட்டு விடுதி; முதன்மை நிலை விளையாட்டு மையம் ஆகியவற்றையும் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.

சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உணவுக்கூடம், சமையற்கூடம் உள்ளிட்ட வசதிகள் கொண்ட 250 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்குமிட கட்டடத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் திரு கே.சி. வீரமணி, தலைமைச் செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் திரு முகமது நசீமுத்தின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் திரு க. இராஜாராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்