முக்கிய செய்திகள்:
கைவினைக் கலைஞர்கள் 37 பேருக்கு பூம்புகார் விருது - முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்

முதலமைச்சர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், 2009-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 37 கைவினைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளையும், கடந்த 2 ஆண்டுகளுக்கான பூம்புகார் மாவட்ட கைத்திறன் விருதுகளை 122 கைவினைஞர்களுக்கும் வழங்கி கவுரவித்தார்.

கைவினைக் பொருட்களை தயாரிக்கும் கைவினைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், கைவினைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பூம்புகார் விருது, 2002 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் "மாநில விருது" என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டு, ஆண்டுதோறும் சிறந்த 10 கைவினைஞர்களை தேர்வு செய்து "பூம்புகார் மாநில விருது" தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது- அதன்படி, 2009 - 2010, 2010 - 2011, 2011 - 2012 மற்றும் 2012 - 2013 ஆம் ஆண்டுகளுக்கு பூம்புகார் மாநில விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 37 கைவினைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் அடையாளமாக 6 கைவினைஞர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, 4 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ்களை முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா வழங்கி கவுரவித்தார்.

கைவினைஞர்களில் 10 பேருக்கு மட்டுமே மாநில விருது அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களை மேலும் ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் 16 வகையான கைவினைத் தொழில்களில் சிறந்த 85 கைவினைஞர்களுக்கு ஆண்டுதோறும் "பூம்புகார் மாவட்ட கைத்திறன் விருதுகள்" வழங்கப்படும் என்று 2011-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது - அதன்படி, பூம்புகார் மாவட்ட கைத்திறன் விருதுகள் 2011 - 2012 ஆம் ஆண்டு 60 கைவினைஞர்களும், 2012 - 2013 ஆம் ஆண்டு 62 கைவினைஞர்களும், என மொத்தம் 122 கைவினைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் அடையாளமாக ஒரு கைவினைஞருக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும், சான்றிதழையும் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கி கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக தொழில்துறை அமைச்சர் திரு.பி.மோகன், தலைமைச் செயலாளர் திருமதி.ஷீலா பாலகிருஷ்ணன், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் திரு.ஹர்மந்தர் சிங், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான திருமதி.ஷீலா ராணி சுங்கத் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். கைவினைத் தொழில்களுக்கு அதிக எண்ணிக்கையிலான மாவட்ட விருதுகள் தமிழ்நாட்டில்தான் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்