முக்கிய செய்திகள்:
பல்வேறு மாவட்டங்களில் புதிய சார் பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள், சென்னையில் பதிவுத்துறை பயிற்சி நிலையத்திற்கான தங்கும் விடுதி - முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

காஞ்சிபுரம், கோவை, ராமநாதபுரம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 20 இடங்களில் சுமார் 10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சார் பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் சென்னையில் 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பதிவுத்துறை பயிற்சி நிலையத்திற்கான தங்கும் விடுதி ஆகியவற்றை முதலமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், சார் பதிவாளருடன் இணைய தளம் மூலம் பொதுமக்கள் ஆவணப் பதிவிற்கு முன்பதிவு செய்து கொள்ளும் வகையில், இணைய வழி பதிவு நேரம் ஒதுக்கீடு செய்யும் வசதியையும் முதலமைச்சர் துவக்கி வைத்தார். இதுமட்டுமின்றி, பதிவுத்துறையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் இணைய நெரிமுறை புகைப்படக் கருவிகள் நிறுவிடும் திட்டத்தினையும் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்துள்ளார்.

நில ஆவணங்கள் பதிவு செய்தல், வில்லங்கச் சான்று வழங்குதல், திருமணப் பதிவு போன்ற பணிகளுக்காக சார்பதிவாளர் அலுவலகங்களை பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் நாடி வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சார்பதிவாளர் அலுவலகங்கள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருவதோடு, பதிவு ஆவணங்களை பராமரிப்பதற்கும், பணியாளர்கள் பணியாற்றுவதற்கு போதிய இட வசதியின்றியும், சிறிய இடங்களுக்கு அதிக அளவில் வாடகை தர வேண்டிய நிலையையும் கருத்தில் கொண்டு, வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சொந்த கட்டடங்கள் கட்டித்தர முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, நாமக்கல் மாவட்டம் - பள்ளிபாளையம் மற்றும் புதுச்சத்திரம், வேலூர் மாவட்டம் - ஜோலார்பேட்டை, வாலாஜா, ஆற்காடு மற்றும் கலவை, திருவண்ணாமலை மாவட்டம் - தூசி மற்றும் கீழ்கொடுங்காலூர், காஞ்சிபுரம் மாவட்டம் - குன்றத்தூர், பெரிய காஞ்சிபுரம் இணை சார் பதிவாளர்-2-வது அலுவலகம், தூத்துக்குடி மாவட்டம் - புதூர் மற்றும் கடம்பூர், ஈரோடு மாவட்டம் - கவுந்தப்பாடி, கோயம்புத்தூர் மாவட்டம் - பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் - ஊத்தங்கரை, திண்டுக்கல் மாவட்டம் - குஜிலியம்பாறை, இராமநாதபுரம் மாவட்டம் - கடலாடி, கடலூர் மாவட்டம் - கம்மாபுரம், புதுக்கோட்டை மாவட்டம் - இலுப்பூர், திருப்பூர் மாவட்டம் - பல்லடம் ஆகிய 20 இடங்களில் 9 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள், சென்னையில் 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பதிவுத்துறை பயிற்சி நிலையத்திற்கு தங்கும் விடுதி என மொத்தம் 10 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய கட்டடங்களை முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 6-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்தப் புதிய சார்பதிவாளர் அலுவலகங்களில், அலுவலர்களுக்கான அறைகளுடன் கணினி அறை, பதிவுருக்கள் பாதுகாப்பு அறை, பொதுமக்களுக்கு கூடுதல் வசதிகளுடன் காத்திருப்போர் அறை, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கான சாய்தளமேடை, அகலமான நடைபாதை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் கால விரையமின்றி ஆவணப் பதிவினை மேற்கொள்ளும் பொருட்டு, இணையதளம் மூலம் சார்பதிவாளருடன் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆவணப் பதிவு செய்து கொள்ள முன் பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றும், ஆவணப்பதிவு செய்வதற்கான குறிப்பிட்ட நேரத்தை பொதுமக்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொண்டு, அந்த நேரத்தில் சார்பதிவாளர் அலுவலகம் சென்று தங்களது ஆவணப்பதிவு தொடர்பான பணிகளை விரைவாக நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மே மாதம் 13-ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பிற்கிணங்க தேசிய தகவல் மையத்தால் தயாரிக்கப்பட்ட மென்பொருள் மூலம் பதிவுக்கு வரும் நபர் தமது பதிவு தொடர்பாக, அதாவது சொத்தை எழுதிக்கொடுப்பவர், அதனை பெறுபவர், சொத்துக்களின் விவரம் போன்ற அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டு இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்தவர்கள், அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களுக்குச் சென்று தங்கள் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். பதிவுக்கு வரும் நபரால் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட விபரங்களை தொடர்புடைய சார்பதிவாளர் உறுதி செய்து அதன் பின் ஆவணப் பதிவினை மேற்கொள்வார். அதே நேரத்தில், முன்பதிவு செய்யாமல் ஆவணப் பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வருபவர்களுக்கும் போதிய காலஅவகாசம் இருப்பது உறுதி செய்யப்படும்.

சார்பதிவாளருடன் இணையதளம் மூலம் பொதுமக்கள் ஆவணப் பதிவிற்கு முன்பதிவு செய்து கொள்ளும் வகையில் இணையவழி பதிவு நேர ஒதுக்கீடு செய்யும் வசதியை முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 6 -ம் தேதி தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார். இதன் மூலம் பதிவு நடைமுறை செம்மைப்படுத்தப்படுவதுடன், பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் காத்திருக்கும் நேரமும் வெகுவாக குறையும். பொதுமக்களுக்கு விரைவு மற்றும் வெளிப்படையான சேவைகள் அளித்திடவும், சார்பதிவாளர் அலுவலகங்களில் தரகர்களின் நடமாட்டத்தினை தடுத்திடவும், மோசடி பதிவு மற்றும் ஆள்மாறாட்டத்தினை தடுத்திடவும், தமிழ்நாட்டில் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இணைய நெறிமுறை புகைப்படக்கருவிகள் நிறுவுதல் மற்றும் சார்பதிவகங்களில் அளிக்கப்படும் சேவைகளை 9 மண்டல அலுவலகங்களிலிருந்தும், பதிவுத்துறைத் தலைவர் அலுவலகத்திலிருந்தும் தொலைக் கண்காணிப்பு செய்யும் திட்டம் கடந்த ஆண்டு மே மாதம் 3-ம் தேதி சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்திற்காக வன், மென்பொருட்கள் வாங்குதல் மற்றும் உரிய சாதனங்கள் நிறுவுதல் ஆகியவற்றிற்கான முதலீட்டு செலவினமாக 3 கோடியே 46 லட்சத்து 92 ஆயிரத்து 705 ரூபாயும், குறுந்தகடுகள் கொள்முதல் மற்றும் இத்திட்டப் பணியினை மேற்கொள்வதற்காக பணியமர்த்தப்படும் நபர்களுக்கான சம்பளத்தொகை உள்ளிட்ட தொடர் செலவினமாக 9 கோடியே 30 லட்சத்து 90 ஆயிரத்து 280 ரூபாயும் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தினை சுயசார்பு உடையதாகவும், வருவாய் ஈட்டுவதாகவும் அமைத்திட ஆவணப்பதிவு மற்றும் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட ஒளிப்பதிவு குறுந்தகடுகளை சம்பந்தப்பட்ட ஆவணதாரர்களுக்கு 50 ரூபாய்க்கு வழங்கிடவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் சார்பதிவகங்களில் நடைபெறும் ஆவணப்பதிவு மற்றும் திருமணப் பதிவுகளை ஒளி-ஒலிப்பதிவு செய்யப்படுகிறது. அவ்வாறு பதிவு செய்யப்படும் ஒளிப்பதிவுகள் ஆவணப் பதிவு மற்றும் திருமணப்பதிவிற்கு நல்ல அத்தாட்சியாகும். ஆவணப்பதிவு, திருமணப்பதிவுகளின் போது எடுக்கப்படும் ஒளிப்பதிவுகள் துறைக்கு மட்டுமின்றி சம்பந்தப்பட்டவர்களுக்கும் நல்ல சான்றாக அமையும். இது தவிர, சார்பதிவாளர் அலுவலகங்களை மண்டல அலுவலகங்களிலிருந்தும் துறைத்தலைமை அலுவலகத்திலிருந்தும் தொலைக் கண்காணிப்பு செய்யப்படும். பதிவுகள் ஒளிப்பதிவு செய்யப்படுவதால் எதிர்காலத்தில் ஆள்மாறாட்டம், போலி ஆவணப்பதிவு ஆகியவை குறித்த விசாரணைக்கு சான்றாக அமையும். மேற்கண்ட சிறப்பம்சங்களைக் கொண்ட சுயசார்பு உடைய இந்தத் திட்டத்தினால் பொது மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.

பதிவுத் துறையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் இணைய நெறிமுறை புகைப்படக்கருவிகள் நிறுவிடும் திட்டத்தினை முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 6-ம் தேதி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் திரு பி. தங்கமணி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு பி.வி. ரமணா, தலைமைச் செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மைச் செயலாளர் திரு எஸ்.கே. பிரபாகர், பதிவுத் துறைத் தலைவர் திரு தர்மேந்திர பிரதாப் யாதவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்