முக்கிய செய்திகள்:
சென்னை மெட்ரோ ரயிலின் முதல் ரயில்பெட்டி தொடரின் சோதனை ஓட்டம் - முதலமைச்சர் ஜெயலலிதா கோயம்பேடு

சென்னை மெட்ரோ ரயிலின் முதல் ரயில்பெட்டி தொடரின் சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா, கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சென்னையில் 14,600 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு, 45 புள்ளி 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வண்ணாரப்பேட்டை - சென்னை விமானநிலையம் இடையே 23.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் வழித்தடமும், சென்ட்ரல் - பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2-வது வழித்தடமும் அமைக்கப்படுகிறது. இதில், முதல் கட்டமாக, கோயம்பேடு - பரங்கிமலை இடையிலான உயர்மட்டப் பாதையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மெட்ரோ ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கோயம்பேடில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக மெட்ரோ ரயில் முனையம் மற்றும் பணிமனை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் அருகே, கான்கிரீட் தளத்தில் 800 மீட்டர் தூரத்திற்கு வட்டவடிவ சுற்று ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மெட்ரோ முதல் ரயில் பெட்டித் தொடரின் சோதனை ஓட்டத்தை இன்று தொடங்கி வைக்க வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சாலையின் இருமருங்கிலும் கழக தொண்டர்களும், பொதுமக்களும் திரளாகக் கூடி நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை, தொழில்துறை அமைச்சர் திரு.தங்கமணி, தலைமைச் செயலாளர் திருமதி.ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து, ரயில் பெட்டிக்குள் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா அதன் செயல்பாடுகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். இதனைத்தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயிலின் முதல் ரயில்பெட்டி தொடரின் சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா, பொத்தானை அழுத்தியும், கொடியசைத்தும் துவக்கி வைத்தார்.

மேலும் செய்திகள்