முக்கிய செய்திகள்:
காட்டுப் பன்றிக்காக அமைக்கப்பட்ட கம்பி வலையில் பெண் சிறுத்தை சிக்கியது.
குடியாத்தம்: பேர்ணாம்பட்டை அடுத்த கோக்கலூர் அருகே, மோர்தானா செல்லும் வனப் பாதையில் அமைந்துள்ளது ஐம்புலம் குட்டை. அங்கு காட்டுப் பன்றியைப் பிடிக்க மர்ம நபர்கள் கம்பி வேலி அமைத்துள்ளனர். சனிக்கிழமை அதிகாலை அவ்வழியே வந்த பெண் சிறுத்தை அந்தக் கம்பி வலையில் சிக்கிக் கொண்டது, இதுகுறித்து அப்பகுதியில் மாடு மேய்க்கச் சென்றவர்கள் காலை 6.30 மணியளவில் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பேர்ணாம்பட்டு வனச் சரக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, வனவர்கள் ரவி, சங்கரய்யா, திருப்பதி ஆகியோர் அங்கு சென்றனர். பிறகு, உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது, இதையடுத்து, மாவட்ட வனப் பாதுகாவலர் முத்தையா, குடியாத்தம் வனச்சரக அலுவலர் குமார், டிஎஸ்பி இ.விஜயகுமார் உள்ளிட்டோர் அங்கு சென்றனர். சிறுத்தை சிக்கியதை அறிந்த பேர்ணாம்பட்டு வட்டாரப் பொது மக்கள் அதைக் காணக் குழுமினர். வலையில் சிக்கிய சிறுத்தை மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டது, எனவே, சென்னை, வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து வனவிலங்கு, கால்நடை மருத்துவர் திருமுருகன் தலைமையிலான குழு வரவழைக்கப்பட்டது. அக்குழுவினர் குழாய் மூலம் சிறுத்தை மீது மயக்க மருந்தை தெளித்தனர். 20 நிமிடங்களில் சிறுத்தை மயக்கமடைந்தது, பின்னர், மயக்கமடைந்த சிறுத்தை கூண்டில் ஏற்றப்பட்டது. சிறுத்தையின் காலில் ஏற்பட்டிருந்த காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பேர்ணாம்பட்டு வனச் சரக அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
மேலும் செய்திகள்