முக்கிய செய்திகள்:
ஓணம் பண்டிகை: கருணாநிதி வாழ்த்து

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள ஓணம் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:–

ஓணம் திருநாள்! கேரள மாநில மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடும் வண்ணமயமான இனிய பண்பாட்டுத் திருநாள்.

ஓணம் திருநாள், வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒழிக்கப்பட வேண்டும்; ஆணவமும் அகம்பாவமும் அழிக்கப்பட வேண்டும்; அன்பு, ஓற்றுமை, அமைதி, சகிப்புத் தன்மை, சகோதர நேயம், பகிர்ந்துண்ணும் பண்பு முதலிய குணங்கள் பேணி வளர்க்கப்பட வேண்டும் என்பனவற்றை மனித சமுதாயத்திற்கு உணர்த்துகிறது.

மாபலிச் சக்கரவர்த்தி பகைவரால் வெல்ல முடியா வீரனாகவும், மக்கள் நலம்நாடி நல்லரசு செலுத்திய வேந்தனாகவும் விளங்கியவன் என்றும்; வஞ்சகத்தால் அவனை வெல்லக் கருதிய பகைவர் விஷ்ணுவிடம் முறையிட, விஷ்ணு குள்ளமான வடிவுகொண்டு மாபலியிடம் மூன்றடி மண் பிச்சை கேட்க; மாபலியும் அதனைத் தர, உடனே விஷ்ணு வானளாவிய வடிவெடுத்து, மண்ணையும் விண்ணையும் ஈரடியால் அளந்து, மூன்றாம் அடியை மாபலியின் தலையில் வைத்து அவனை அழித்தான் என்றும் புராணக் கதையொன்று சொல்கிறது.

அந்தக் கதைப்படி மாபலி வஞ்சகத்தால் கொல்லப்பட்டாலும், அந்த மாமன்னனின் ஆற்றலை இன்றும் போற்றி வரும் கேரள மக்கள், மாபலி மன்னன் ஆண்டுக்கொரு முறை தம் நாட்டைக் காண வருவான் என்றும்; அப்போது அவன் தம் இல்லம் வருவான் என்றும் கருதி, அந்த நம்பிக்கையோடு அவனை வரவேற்க தம் இல்லத்தை அழகுபடுத்தி, புத்தாடை உடுத்தி, வாசலில் ‘அத்தப்பூ’ எனும் சித்திரக் கோலங்கள் இட்டுக் கொண்டாடி மகிழ்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் வாழும் மலையாள மக்கள் அனைவரும் தம் உற்றார் உறவினர் நண்பர்கள் சூழ ஓணம் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ வேண்டும் என்பதற்காக, அவர்கள் நிறைந்து வாழும் தமிழகத்தின் எல்லையோரங்களில் உள்ள கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கும்– சென்னை மாநகருக்கும் அரசு விடுமுறை வழங்கிக் கேரள மாநில மக்களின் உணர்வுகளைப் போற்றியது கடந்த கால திராவிட முன்னேற்றக் கழக அரசு என்பதை இத்திருநாளில் நினைவுபடுத்தி;

மலையாள மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்