முக்கிய செய்திகள்:
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் மாற்றங்களை ரத்து செய்யுங்கள்: ராமதாஸ் கோரிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

கிராமப்புற ஏழைகளுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் நோக்குடன் அறிமுகம் செய்யப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் அதிரடியான மாற்றங்களை செய்து மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆணையிட்டுள்ளார். இந்த மாற்றங்களுக்கான நோக்கம் வரவேற்கக் கூடியது தான் என்றாலும், இவற்றின் தாக்கம் மிகவும் மோசமானதாக அமைந்துவிடும்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வறட்சி போன்ற சூழல் காணப்படுவதால், அதை சமாளிக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி மேற்கொள்ளப்படும் பணிகளில், குறைந்தது 50% பணிகள் தடுப்பணைகளை அமைப்பது, குளங்களை வெட்டுவது உள்ளிட்ட நீர்ப்பாதுகாப்பு பணிகளாக அமைய வேண்டும் என்பது நிதின்கட்கரி அறிவித்துள்ள மாற்றங்களில் மிகவும் முக்கியமானதாகும். மேலோட்டமாக பார்க்கும் போது இது சரியானதாகவே தோன்றும்.

ஆனால், இது தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் அடிப்படை கட்டமைப்பையே தகர்த்தெறிந்து விடும்.

ஊரக வேலைத் திட்டத்தின் அடிப்படை நோக்கமே கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரப் பாதுகாப்பு வழங்குவதுதான். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சியிலும் என்னென்ன தேவைகள் உள்ளனவோ, அவற்றை நிறைவேற்றும் வகையில் இத்திட்டப் பணிகளை மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுதந்திரமும், அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதற்கு மாறாக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் என்னென்ன பணிகளை செய்யவேண்டும் என மத்திய அரசே ஆணையிடுவது உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தில் குறுக்கிடும் செயலாகும். இத்திட்டத்தை செயல்படுத்தும் உரிமையும், அதிகாரமும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாடாளு மன்ற சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசாணையின் மூலம் அதைப் பறிக்க முயல்வது அரசியல் சட்டத்திற்கு எதிரான செயலாகும்.

வறட்சியை சமாளிப்பதற்காக தடுப்பணைகளை அமைப்பது போன்ற நீர்ப் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கருதினால், வறட்சி நிவாரணப் பணிகளுக்காக சிறப்பு நிதியை ஒதுக்கி அதைக் கொண்டு செய்யலாம். இல்லாவிட்டால், நீர்ப்பாதுகாப்பு பணிகளில் கவனம் செலுத்தும்படி உள்ளாட்சி அமைப்புகளைக் கேட்டுக்கொண்டால், ஒவ்வொரு ஊராட்சியும் அதன் தேவைக்கு ஏற்ப, அதனிடம் உள்ள நிதியாதாரத்தைக் கொண்டு இத்தகைய பணிகளை மேற்கொள்ளும்.

அவ்வாறு செய்வதை விடுத்து இதுபோன்ற பணிகளை மட்டுமே செய்ய வேண்டும் என உள்ளாட்சிகளை மத்திய அரசு கட்டாயப்படுத்தினால் உண்மையான தேவைகளை நிறைவேற்ற முடியாமல் போய்விடும்.

ஊரக வேலைத் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியில் 60% ஊதியத்திற்காகவும், 40% தேவையான பொருட்களை வாங்கவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், நீர்ப்பாது காப்பு பணிகளை மேற்கொள்வதற்காக பொருட்களை வாங்குவதற்கான நிதியை 49% ஆக உயர்த்தியும், ஊதியத்திற்கான நிதியை 51% ஆக குறைத்தும் மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது.

ஊதியத்திற்கான நிதி பெருமளவில் குறைக்கப்பட்டு விட்டதால் ஏழை மக்களுக்கு போதிய அளவு வேலை வழங்க முடியாது. ஏற்கனவே, நிதி நெருக்கடி காரணமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 100 நாட்கள் வேலை வழங்க முடியாத சூழல் உள்ள நிலையில் மத்திய அரசின் இந்த உத்தரவால் ஏழைகளுக்கு வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை மேலும் குறைந்து விடும்.மொத்தத்தில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கத்தையே இந்த மாற்றங்கள் சிதைத்து விடும்.

வேலை உறுதித் திட்டம் தனியார் விவசாயப் பணிகளுக்கும் நீட்டிக்கப்படும் என்று பாரதிய ஜனதாக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல் ஏழை மக்களை பாதிக்கும் வகையிலான மாற்றங்களைச் செய்வது தேவையில்லாத ஒன்றாகும்.

எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை ரத்து செய்து விட்டு, இத்திட்டத்தை உழவு, நடவு, அறுவடை போன்ற தனியார் விவசாயப் பணிகளுக்கும் நீட்டிக்கும் வகையில் மாற்றம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்