முக்கிய செய்திகள்:
அ.தி.மு.க. மேயர் வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா சூறாவளி பிரசாரம்

கோவை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கும், 12 மாநகராட்சி வார்டுகள் 8 நகராட்சி தலைவர்கள், 53 நகராட்சி வார்டுகள் 7 பேரூராட்சி தலைவர்கள், 101 பேரூராட்சி வார்டுகள் உள்ளிட்ட காலியான உள்ளாட்சி பதவிகளுக்கு வருகிற 18–ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

வேட்பு மனுதாக்கல் கடந்த 28–ந்தேதி தொடங்கியது. இன்றுடன் வேட்பு மனுதாக்கல் முடிவடைகிறது. அ.தி.மு.க. வேட்பாளர்களை முதல்– அமைச்சர் ஜெயலலிதா கடந்த 29–நதேதி அறிவித்தார்.

கோவையில் கணபதி ராஜ்குமார், நெல்லையில் புவனேஸ்வரி, தூத்துக்குடியில் அந்தோணி கிரேஸி ஆகியோர் மேயர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.

அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் நேற்று வேட்பு மனுதாக்கல் செய்தனர். பா.ஜனதா வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுதாக்கல் செய்கிறார்கள். தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் கோவை, நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சி அ.தி.மு.க. மேயர் வேட்பாளர்களை ஆதரித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா 3 நாள் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:–

வருகிற 18–ந்தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் மேயர் வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்–அமைச்சர் ஜெயலலிதா கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிலவரப்படி தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு கழக வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரசாரம் சுற்றுப் பயணம் செய்ய உள்ளார்.

12.9.14 (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடி மாநகராட்சி,

14.9.14 (ஞாயிறு) திருநெல்வேலி மாநகராட்சி,

15.9.14 (திங்கட்கிழமை) கோவை மாநகராட்சி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உள்ளாட்சி இடைததேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டனர். தாங்கள் போட்டியிடும் பகுதிக்கு சென்று ஓட்டு கேட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா 3 மாநகராட்சிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். முதல்– அமைச்சர் ஜெயலலிதா பிரசாரம் செய்யும் பகுதிகளில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

மேலும் செய்திகள்