முக்கிய செய்திகள்:
தமிழகம் முழுவதும் 8 மாதங்களில் ரேஷன் அரிசியை கடத்திய 4 ஆயிரம் பேர் சிக்கினர்

தமிழகம் முழுவதும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை (சிவில் சப்ளை சி.ஐ.டி) போலீசார், தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கூடுதல் டி.ஜி.பி. ராதா கிருஷ்ணன் உத்தரவின் பேரில், ரேஷன் அரிசியை கடத்துபவர்கள் மற்றும் அவற்றுக்கு உடந்தையாக இருப்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.இந்த ஆண்டு (2014) இதுவரை 8 மாதங்களில் ரேஷன் அரிசியை கடத்திய குற்றத்துக்காக 4 ஆயிரத்து 371 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 84 பேர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சட்டத்தின்கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 594 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கோவையை சேர்ந்த கோபால்சாமி, வெள்ளியங்கிரி, மூர்த்தி, பழனிச்சாமி ஆகிய 4 பேரும், கர்நாடகாவுக்கு 2 வாகனங்களில் ரேஷன் அரிசியை கடத்திய குற்றத்துக்காக கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். சேலம் – தர்மபுரி நெடுஞ்சாலையில் பிடிபட்ட இவர்கள் மீதும் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்துள்ளது.

இவர்களிடமிருந்து 40 குவிண்டால் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை கடத்தல் காரர்களிடமிருந்து 8 ஆயிரத்து 626 குவிண்டால் அரிசி கைப்பற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்