முக்கிய செய்திகள்:
விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துபவர்களை தாக்குவதா?: ராம கோபாலன் கண்டனம்

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்து முன்னணி தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி திருவிழாவை பொது விழாவாக சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறது. இந்து சமுதாய ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, பண்பாடு, கலாசாரம் பற்றிய நம்பிக்கையை இதன் மூலம் ஏற்படுத்தி வருகிறது.ஆன்மீக விழிப்புணர்வு மூலம் தேசிய எழுச்சியை ஏற்படுத்தி வரும் விநாயகர் சதுர்த்தி விழா திருவிழாவானது, இன்று தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் மக்கள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருநெல்வேலியில் விசர்ஜன ஊர்வலத்தில் காவல்துறை அதிகாரிகள் சிலரின் தூண்டுதலால் தடியடி, பலப்பிரயோகம் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.அறுபதிற்கும் மேற்பட்டோர் மீது பொய் வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். காயமடைந்தோர், கைது செய்யப்பட்டோரை இந்து முன்னணியின் மாநிலத்தலைவர் டாக்டர் அரசுராஜா, மாநிலத்துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் ஆகியோர் சென்று பார்க்க மருத்துவமனை வந்தபோது, காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

இது மனிதாபிமானமற்ற செயல். இந்து முன்னணியினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை தமிழக அரசு நீக்க உத்தரவிட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் காவல்துறை அதிகாரிகளை அரசு கண்காணிக்க வேண்டும்.

வேற்று மதத்தினர் ஆர்ப்பாட்டங்கள், அரசியல்வாதிகளின் போராட்டங்களின் போது நடக்கும் அராஜகங்களை கைகட்டி வேடிக்கைப் பார்க்கும் காவல்துறை அதிகாரிகள், இந்துக்களின் விழாக்களில் அமைதியாக செல்லும் மக்கள் மீது தங்களது பலத்தையும், அடக்குமுறைகளையும் ஏவுவது தமிழகத்தின் கண்ணியத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயல் என்பதை தமிழக முதல்-அமைச்சர் உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக அரசு காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகத்தையும், காவல்துறையில் உள்ள சில அதிகாரிகளின் உள்நோக்கத்தையும் புரிந்து நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் ராம கோபாலன் கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்