முக்கிய செய்திகள்:
சுப்பிரமணிய சாமி கருத்துக்கு ஜெயலலிதா கண்டனம்

பிரதமருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மேலும் கூறி இருப்பதாவது:-

இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற கொடூர மனப்பாங்கினால் அந்த மீன்பிடி படகுகள் விடுவிக்கப்படாததால், தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. நிருபர்களுக்கு பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி அளித்த பேட்டி 1-ந் தேதி ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர், தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை விடுவிக்க வேண்டாம் என்று இலங்கை அரசுக்கு தான்தான் ஆலோசனை வழங்கியதாக கூறியிருப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

சுப்பிரமணியசாமியின் இந்த கருத்து, தமிழக மீனவர்கள் மத்தியில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்கள் மத்தியிலும் மிகுந்த ஆத்திரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது மத்திய அரசு அல்லது பா.ஜ.க.வின் அதிகாரபூர்வமான கருத்தாக இருக்காது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். வாழ்வாதாரத்துக்கான ஒரே ஆதாரமாக இருந்த படகுகள் இல்லாமல், மீனவர்கள் மிகவும் சோர்ந்து போயுள்ளனர். பாக் நீரிணைப் பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலை அமைதியாக மேற்கொள்ள வேண்டும் என்று வரலாற்றுப்பூர்வமாக அவர்கள் கோரிவரும் உரிமையை மறுப்பது, அவர்களின் கோபத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது.

நம்பிக்கை இழந்துள்ள மீனவர்கள் போராட்டம், ஆர்ப்பாட்டங்களில் குதிக்கின்றனர். டெல்லியில் கடந்த ஆகஸ்டு 29-ந் தேதி நடந்த இந்திய-இலங்கை மீன்வளத்துறை இணைக்குழு கூட்டத்தில், 62 மீன்பிடி படகுகள் விடுவிக்கப்படாததை தமிழக அரசின் மீன்வளத்துறையின் செயலாளர் குறிப்பிட்டு சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார். கச்சத்தீவையும், பாக் நீரிணைப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையை மீட்கவும், அதன் மூலம் இலங்கை மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையேயுள்ள நீண்டநாள் பிரச்சினையைத் தீர்க்கவும் உங்கள் அரசு ஒரு பொருத்தமான வழிமுறையைக் கண்டுபிடிக்கும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்