முக்கிய செய்திகள்:
பா.ம.க. ஆர்ப்பாட்டம்: ராமதாஸ்–குமரி அனந்தன் பங்கேற்பு

தமிழ்நாட்டில் மது விலக்கை வலியுறுத்தி பா.ம.க. பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் பள்ளிக் கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள மதுக்கடைகளை உடனே மூடக்கோரி சென்னை சேப்பாக்கத்தில் பா.ம.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:–

ஒரு இனத்தை அல்லது நாட்டை அழிக்க போர் நடத்துவார்கள். இப்போது நவீன விஞ்ஞானத்தின் மூலம் வைரஸ் கிருமிகளையும், விஷ கிருமிகளையும், அணுகுண்டுகள் மூலம் வீசுகிறார்கள். இதனால் பல கொடிய நோய்கள் உருவாகும். அதையெல்லாம் விட கொடி நோய் மதுவால் உருவாகிறது.இந்தியாவில் ஆண்டுக்கு 18 லட்சம் பேர் மதுவால் உயிர் இழக்கிறார்கள். தமிழகத்தில் 2 லட்சம் பேர் இறக்கிறார்கள். 11 வகையான உயிர் கொல்லி நோய்கள் மதுவால் உருவாவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் குஜராத், நாகலாந்து ஆகிய மாவட்டங்களில் பூரண மதுவிலக்கு அமுலில் இருக்கிறது. கேரளாவில் வருகிற அக்டோபர் முதல் மதுவிலக்கை அமல்படுத்த உள்ளது.இப்படி பல மாநிலங்கள் மதுக்கடைகளை மூடி வரும் நிலையில் தமிழகம் கூடுதலாக மதுக்கடைகளை திறந்து வருகிறது.

நான் தமிழக அரசுக்கு சவால் விடுகிறேன். வருகிற தேர்தலில் மதுக்கடைகளை ஒழிப்போம் என்று நாங்கள் மக்களை சந்திக்க தயார். ஆனால் நீங்கள், மது மக்களுக்கு நன்மைதான் நாங்கள் மதுக்கடைகளை இன்னும் திறப்போம் என்று சொல்லி மக்களை சந்திக்க தயாரா?

கடந்த ஆண்டு ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினால், மது கடைகளை மூட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. அந்த தீர்ப்பை அரசு அமுல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

குமரி அனந்தன் பேசும் போது, இது சுயராஜ்ஜிய போராட்டம். காந்தியின் கொள்கையை நிலை நாட்டும் போராட்டம். ஆட்சியே போனாலும் பரவாயில்லை. மதுக்கடைகளை திறக்க அனுமதிக்க மாட்டேன் என்று சொன்ன அண்ணா வழியில் கட்சி நடத்துபவர்கள் மதுக்கடைகளை திறப்பது வேதனையானது. டாக்டர் ராமதாஸ் நடத்தும் இந்த போராட்டம் மகத்தான மக்கள் சேவையாகும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரிகள் ஏ.கே.மூர்த்தி, என்.டி.சண்முகம், துணைத் தலைவர்கள் கே.என்.சேகர், ஈகை தயாளன், துணைப் பொதுச் செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், கோ.ரவிராஜ், மாநில நிர்வாகிகள் அக்பர் அலி, வியனரசு, வக்கீல் பாலு, மாம்பலம் வினோத் நாடார், இரா. அருள், மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், மாவட்ட செயலாளர்கள் மாதவரம் குணா, கன்னியப்பன், கோயம்பேடு வி.ஜே.பாண்டியன், வெங்கடேசன், ஜமுனா கேசவன், திருவொற்றியூர் நகர தலைவர் பூபதி, நகர செயலாளர் யுவராஜ், வடிவேலன், அடையார் வடிவேல், கவரப்பேட்டை, ஜெயபால், முத்துக்குமார், சுரேஷ், சேகர் செல்வராஜ், கே.எஸ்.கோபால், மு.போ.சசிகுமார், சாஜா குணா உள்பட பலர் பங்கேற்றனர்.

 

மேலும் செய்திகள்