முக்கிய செய்திகள்:
விபத்தில் பலியான 11 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்: ஜெயலலிதா உத்தரவு

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

திருச்சி மாவட்டம், கோ. அபிஷேகபுரம் கிராமம் அருகே இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த மணிகண்டம் ஈகை பகுதியைச் சேர்ந்த விக்டர் அலெக்ஸாண்டரின் மகன் எடிசன் அமிர்தராஜ்; சிந்தாமணி கிராமம், அண்ணாமலை நகர் அருகே இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த மேலசிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த கருப்புசாமியின் மகன் சுந்தரமூர்த்தி; திருவாசி கிராமம், சேலம் பிரதான சாலையில் ஆட்டோவில் பயணம் செய்த பிச்சாண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்த கனகராஜின் மகன் தினேஷ்குமார்; வீராசாமியின் மகன் பாலு;

காஞ்சிபுரம்–வந்தவாசி சாலையில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த செவிலிமேடு பகுதியைச் சேர்ந்த கைலாசத்தின் மகன் தர்மலிங்கம்; உளுந்தூர்பேட்டை வட்டம், நகர் கிராமம் அருகே இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த செம்மணங்கூர் கிராமத்தைச் சேர்ந்த மாயவனின் மகன் நடேசன்; ஆகியோர் அரசுப்பேருந்து மோதியதில் உயிரிழந்தனர்.

லால்குடி வட்டம், பெருவளப்பூர் பகுதி, நெய்குளம் கிராமம் அருகே, திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த நந்தக்குமார் சம்பவ இடத்திலேயும், பழனியப்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம், கங்காபுரம் கிராமம், அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது அரசுப் பேருந்து மோதியதில், தனியார் பேருந்திலிருந்த சித்தோடு, குட்டை தயிர்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமனின் மகன் கிட்டுசாமி, அரசுப் பேருந்தில் பயணம் செய்த சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த குமாரசாமியின் மகள் சந்தியா ஆகியோர் உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், சுங்கான் கடை, தோட்டியோடு அருகே சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து நிலைத் தடுமாறி அருகிலிருந்த குளத்தில் விழுந்ததில் விளவங்கோடு வட்டம், விழுந்தயம்பலத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயர சம்பவங்களில் அகால மரண மடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்