முக்கிய செய்திகள்:
தி.மு.க. ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்த உதவிகள் என்ன?: கருணாநிதி

தி.மு.க. ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்த உதவிகள் என்ன? என்ன? என்பது குறித்து கருணாநிதி பட்டியலிட்டுள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் ஊனமுற்றோர் என்ற சொல்லால் அழைக்கப்படுபவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்தேன். 19-3-2010 அன்று புதிய சட்டப்பேரவையில் முதன் முதலாக அளிக்கப்பட்ட 2010-2011-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துறை முதல்-அமைச்சரின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டு அன்றே அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வரும், ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர் அலுவலகம் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் எனவும், தமிழ்நாடு ஊனமுற்றோர் நல வாரியம்  தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம்  எனவும் குறிப்பிடப்படும் என்றும்,  ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர்  மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர்  எனவும்,  மாவட்ட ஊனமுற்றோருக்கான மறுவாழ்வு அலுவலர்   மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்  எனவும், குறிப்பிடப்படுவார்கள் என்று தி.மு.க. அரசு 27-3-2010 அன்று ஆணை பிறப்பித்து, நடைமுறைப்படுத்தியுள்ளது.

2010-2011-ல் முதன்முறையாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கென பேரவையில் தனியே,  மானியக் கோரிக்கை அளிக்கப்பட்டு, அதன்மீது மாற்றுத்திறனாளிகள் நலம் குறித்து விரிவாக ஆராய்ந்து புதிய திட்டங்களை உருவாக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் 2005-2006-ம் ஆண்டில் 49 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில்; தி.மு.க. அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டினைப் படிப்படியாக உயர்த்தி, 2010-2011-ம் ஆண்டில் 176 கோடி ரூபாய் என மூன்றரை மடங்கு உயர்த்தி ஒதுக்கீடு செய்தது.

தமிழக முதல்-அமைச்சரைத் தலைவராகக் கொண்டு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் 26-4-2010 அன்று தி.மு.க. ஆட்சியில் திருத்தி அமைக்கப்பட்டது. 10 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினராக பதிவு செய்யப்பட்டனர். கழக ஆட்சிக் காலத்தில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 856 மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர்களாகச் சேர்ந்தனர்.

நான் கதை வசனம் எழுதிய இளைஞன் திரைப்படத்திற்காக கிடைத்த 45 லட்சம் ரூபாய் தொகையினை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி, பின்னர் அதனை 2010-2011-ம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளின் சமூகப்பாதுகாப்புத் திட்டங்களுக்கு அளித்திட தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்திற்கு வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்திய போது அரசின் அணுகுமுறை என்ன தெரியுமா? சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவதாக காலை ஏடுகளில் செய்தியைப் படித்துவிட்டு, காலை உணவு கூட அருந்தாமல் அப்படியே கீழே இறங்கி காரில் ஏறி நேராக அவர்கள் போராட்டம் நடத்திய இடத்திற்கே சென்று அவர்களின் கோரிக்கைகள் உடனடியாக ஏற்கப்படும் என்று கூறி போராட்டத்தை நிறுத்தச் செய்தவன் நான்.

தி.மு.க. ஆட்சியில் 2010-2011-ம் ஆண்டு பேரவையில் நிதியமைச்சர் படித்த நிதிநிலை அறிக்கையில்,  மாநில அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகள் பெற்றிட நிர்ணயிக்கப்பட்டுள்ள வருவாய் உச்ச வரம்பு முற்றிலும் நீக்கப்படும்.

மாற்றுத்திறனுடையோர் உயர்கல்வி பயிலுவதற்கு ஏதுவாக கல்விக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்த தி.மு.க. அரசு, வரும் கல்வி ஆண்டிலிருந்து தனிக்கட்டணம் செலுத்துவதிலிருந்தும் விலக்களிக்கும்  என்றெல்லாம் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது ஆண்டு வருவாய் 24 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டுமென்று நிர்ணயம் செய்திருப்பது மாற்றுத்திறனாளிகளுக்கு பெரும் பின்னடைவாகவே ஆகிவிடும்.

தி.மு.க. ஆட்சியில் படிக்கப்பட்ட அந்த நிதிநிலை அறிக்கையிலேயே  தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள்ள இயலாத மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு, வருவாய் உச்ச வரம்பு இன்றி, 500 ரூபாய் வீதம் மாதாந்திர உதவித்தொகையை தி.மு.க. அரசு வழங்கி வருவதால் 50 ஆயிரம் பேர் பயன்பெற்று வருகின்றனர். கண் பார்வையற்றோர் மற்றும் இதர மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவித்தொகைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன.

அவர்கள் ஆசிரியப்பணி புரிய சிறப்பு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காது கேளாதோருக்குக் குழந்தைப்பருவத்தின் தொடக்கத்திலேயே கண்டறிந்து சிறப்புக்கல்வி அளிக்கும் பள்ளிகள் மாவட்டந்தோறும் தொடங்கப்பட்டுள்ளன. கை, கால் ஊனமுற்றோருக்கு பயணச்சலுகைகளுடன், நாட்டிலேயே முதல் முறையாக மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டிகள் முதலான பல்வேறு உதவிக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பற்ற பார்வையற்றோருக்கு நிவாரணத்தொகை வழங்கும் திட்டம், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு 60 ஆயிரம் பேர் இத்திட்டத்தில் பயன் அடைந்துள்ளனர். இந்தியாவிலேயே முதல் முறையாக தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் 2008-2009-ம் ஆண்டிலிருந்து 1,000 பேருக்கு மாத உதவித்தொகையாக 500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

2005-2006-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு செலவிடப்பட்ட தொகை ரூபாய் 49 கோடி அளவாக இருந்ததை, வரும் நிதியாண்டில் ரூபாய் 176 கோடியாக உயர்த்தியுள்ளதுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துறை என்னுடைய நேரடி மேற்பார்வையில் இயங்கும் - என்று தி.மு.க. ஆட்சியின் நிதிநிலை அறிக்கையிலே எழுதப்பட்டிருந்தது.

இவ்வாறு அறிக்கையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்