முக்கிய செய்திகள்:
இரண்டு மாதங்கள் சமத்துவ மக்கள் கட்சி ஆண்டு விழா கொண்டாட்டம்: சரத்குமார்

சமத்துவ மக்ள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொடங்கி 31.8.2014 அன்று ஏழு ஆண்டுகள் முடிந்து எட்டாம் ஆண்டு பிறக்க இருக்கிறது. இந்த ஏழு ஆண்டுகாலத்தில் படிப்படியாக முன்னேற்றம் கண்டு வளர்ச்சிநோக்கி பயணித்து வருகிறோம்.

ஈழத்தமிழர் பிரச்னை, தமிழக மீனவர் பிரச்னை, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு, கூடங்குளம் அணுமின் நிலைய ஆதரவு என பல்வேறு பிரச்னைகளை முன்னிறுத்தி போராட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் 7 ஆண்டு காலத்தில் நடத்தியிருக்கிறோம்.

விவசாய வளர்ச்சிக்காகவும், விவசாயிகளின் நலன்காக்கவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். வீட்டுக்கு ஒரு விவசாயியை உருவாக்குவோம் என்ற புதிய சிந்தனையை விதைத்திருப்பதோடு, விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியிருக்கிறோம்.

ஊரக 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டப் பணியாளர்களை விவசாயப் பணிக்கு ஈடுபடுத்த வேண்டும் என்று ச.ம.க. வலியுறுத்தி வந்ததை சமீபத்தில் மத்திய அரசு பரிசீலித்திருக்கிறது. வெளிநாட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் கருப்புப்பணத்தை வெளிக்கொணர வேண்டும் என்ற தீர்மானத்தை 2008 ஆம் ஆண்டு பிரவரி மாதம் மதுரை மாநாட்டில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியிருந்தோம்.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தேனியிலிருந்து லோயர் கேம்ப்வரை நடைப்பயணம் மேற்கொண்டது இயக்கத்தின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி. ஆண்டுதோறும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் உள்ளிட்ட முப்பெரும் விழா கூட்டங்களை நடத்தி எண்ணற்ற ஏழை–எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறோம்.

இப்படியாக மக்கள்நலன் சார்ந்த பணிகளை மேற்கொண்டு தென்காசி, நாங்குனேரி ஆகிய இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு சட்டமன்றத்திலும் செம்மையாகப் பணியாற்றி வருகிறோம்.

இந்த ஏழு ஆண்டு காலமும் சமத்துவமக்கள் கட்சிக்கு நல்லாதரவும், நல்லாசியும் வழங்க வரும் தமிழக மக்களுக்கு என் சார்பிலும் சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமத்துவ மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காக என்னோடு தோளோடு தோள்நின்று அயராது உழைத்து வரும் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் எட்டாம் ஆண்டு துவக்க நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எட்டாம் ஆண்டு தொடக்கநாளில் இருந்து, செப்டம்பர், அக்டோபர் ஆகிய இரண்டு மாத காலத்திற்கு தமிழகமெங்கும் மாவட்ட நிர்வாகிகள் கொடியேற்றுதல், கொள்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்துதல், ஏழைஎளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், தீவிர உறுப்பினர் சேர்க்கை, சிறப்பு மருத்துவ முகாம்கள் நட்த்துதல், அன்னதான நிகழ்ச்சிகள், மாணவ, மாணவிகளுக்கு கலை, விளையாட்டுப் போட்டிகள், மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி இயக்கத்திற்குப் பெருமை சேர்க்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த இனிய எட்டாம் ஆண்டு துவக்க நாளில் சமத்துவ மக்கள்கட்சி மக்கள் நலன் சார்ந்தபணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு தமிழக மக்கள் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவோம் என்று உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்