முக்கிய செய்திகள்:
பெண்களை மதிப்பதில் திரு.வி.க.வுக்கு இணை யாரும் கிடையாது : மு.க.ஸ்டாலின்

சென்னை மணவழகர் மன்றம் முத்தமிழ் விழா அறக்கட்டளையும், ராஜா அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் மணவழகர் மன்றத்தின் 58-வது ஆண்டு முத்தமிழ் விழா ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று தொடங்கியது.

விழாவுக்கு, மன்றத்தின் காப்பாளரும், குஜராத் ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியுமான பு.ரா.கோகுலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் விழாவை தொடங்கி வைத்தார். விழாவில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மங்கையரின் மாண்பினை மதித்தவர் திரு.வி.க. எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஏழை-எளிய குடும்பத்தில் பிறந்த திரு.வி.க. பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் பாடுபட்டவர். மங்கையினரின் மாண்பை மதித்தவர், மகளிரின் துயரத்தை போக்கியவர், உரிமையை உயர்த்தியவர், பெண்கள் வாழ்வு ஏற்றம்பெற அயராது பாடுபட்டவர். பெரியாருக்கும், திரு.வி.க.வுக்கும் இடையே சொற்போர்கள், எழுத்துபோர்கள் அதிகம் இருக்கும். எனினும் தன்னுடைய மனைவி நாகம்மை மறைந்தவுடன், அவருடைய உருவபடத்தை திரு.வி.க.வை கொண்டு தான் பெரியார் திறந்து வைத்தார். ஏனெனில் பெண்களை மதிப்பதில், போற்றுவதில் திரு.வி.க.வுக்கு ஈடு இணை வேறு யாரும் கிடையாது.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டதை போல், பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்த வேளையில் மத்தியில் புதிய அரசு அமைந்துவிட்டது. தற்போது அந்த கோரிக்கை மங்கிப் போய்விட்டது. பெண்களின் முன்னேற்றத்துக்காக போராடிய, பாடுபட்ட திரு.வி.க.வின் புகழ் நீடித்து நிலைக்க வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

மேலும் செய்திகள்