முக்கிய செய்திகள்:
சேலத்தில் கல்வி உரிமை மாநாடு: 144 தடை உத்தரவு ரத்து

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கல்வி உரிமை மாநாடு இன்று மாலை 4 மணிக்கு சேலத்தில் நடக்கிறது. அரசே கல்வியை இலவசமாக்க வேண்டும், அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டும், கட்டாயக் கல்வி அதுவும் கட்டணமில்லாத கல்வி அளிக்க வேண்டும், தாய்மொழியில் கல்வியை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

இந்த மாநாட்டுக்காக சேலம் –நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் உள்ள தனியார் நிலத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு கொடி ஏற்றி மாநாட்டை தொடங்கி வைக்கிறார். பின்னர் கவியரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. முடிவில் சிறப்புரை ஆற்றும் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு அவரது பிறந்த நாளையொட்டி 52 பவுன் தங்க காசுகள் பொற்கிழியாக வழங்கப்படுகிறது.

மாநில அளவில் நடக்கும் இந்த மாநாட்டுக்கு அனுமதி கொடுக்க சேலம் மாவட்ட போலீசார் மறுத்து விட்டனர். இதனால் மாநாடு நடத்த சென்னை ஐகோர்ட்டில் அனுமதி பெற்று உள்ளனர்.

இந்த மாநாட்டையொட்டி 144 தடை உத்தரவை மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் பிறப்பித்து உள்ளார். இதனால் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வாடகை வாகனங்களில் மாநாட்டுக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. கலெக்டரின் தடை உத்தரவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் மற்றும் அனைத்து போலீஸ் நிலையங்கள் தாசில்தார் அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் மல்லூர், அயோத்தியாபட்டணம், மாமாங்கம் உள்ளிட்ட 11 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தொண்டர்கள் யாரும் வாடகை வாகனங்களில் வருகிறார்களா என்று கண்காணித்து வருகிறார்கள்.

இந்த கண்காணிப்பு பணியில் போலீசாருடன் வருவாய்த்துறை ஊழியர்களும் ஈடுபட்டு உள்ளனர். இது தவிர தர்மபுரி மாவட்டம் தொப்பூர் மற்றம் பள்ளிப் பாளையம் உள்ளிட்ட வெளி மாவட்ட சோதனைச் சாவடியிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

மாநாட்டையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், தலைமையில் 4கூடுதல் சூப்பிரண்டுகள், 12 துணை சூப்பிரண்டுகள், 32 இன்ஸ்பெக்டர்கள், மற்றும் 500–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பழனியில் இருந்து தமிழ்நாடு சிறப்புக் காவல் படை போலீசார் 150 பேர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இது தவிர சேலம் மாநகரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஊட்டி, உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்