முக்கிய செய்திகள்:
பாராளுமன்ற துணை சபாநாயகராக தம்பிதுரை பதவி ஏற்றார்

மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு பாராளுமன்ற சபாநாயகராக சுமித்ரா மகாஜன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பாராளுமன்றத்தில் 44 உறுப்பினர்களுடன் காங்கிரஸ் 2–வது இடத்திலும், அ.தி.மு.க. 37 உறுப்பினர்களுடன் 3–வது இடத்திலும் உள்ளது. காங்கிரசுக்கு பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லாததால் எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் துணை சபாநாயகர் பதவியை அ.தி.மு.க.வுக்கு வழங்க பா.ஜனதா முன் வந்தது. துணை சபாநாயகரை ஒரு மனதாக தேர்வு செய்வதில் பா.ஜனதா தலைவர்கள் பிற கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டது.

அ.தி.மு.க.வுக்கு துணை சபாநாயகர் பதவு வழங்க காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் உள்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வின் மூத்த உறுப்பினரும், பாராளுமன்ற அ.தி.மு.க. குழு தலைவருமான மு.தம்பித்துரையை துணை சபாநாயகராக தேர்ந்து எடுக்க முடிவு செய்யப்பட்டது. நேற்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மத்திய மந்திரி ராஜ் நாத்சிங், பா.ஜனதா தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் மனுவை முன் மொழிந்தனர். மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், அத்வானி ஆகியோர் வழிமொழிந்தனர்.

தம்பித்துரை தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் அவர் துணை சபாநாயகராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இன்று பகல் 12 மணிக்கு பாராளுமன்றத்தில் சபா நாயகர் சுமித்ரா மகாஜன் இதனை அறிவித்தார். இதற்கான தீர்மானத்தை உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கொண்டு வந்தார். அதை சுஷ்மாசுவராஜ் வழி மொழிந்தார்.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ், லோக் ஜன சக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் சிவசேனா அகாலி தளம், தெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் வழி மொழிந்து பேசினார்கள்.

பின்னர் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில், உறுப்பினர்கள் ஏகமனதாக தம்பித்துரைக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து துணை சபாநாயகராக தம்பித்துரை தேர்வு செய்யப்பட்டதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

அப்போது உறுப்பினர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பிரதமர் நரேந்திர மோடி மேஜையை தட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்ற விவகாரத் துறை மந்திரி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தம்பித்துரை இருக்கைக்கு சென்று அவருக்கு கை குலுக்கி பாராட்டு தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் தம்பித்துரையை அழைத்துச் சென்று துணை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்து வாழ்த்தினர்.

தம்பித்துரையை வாழ்த்தி பிரதமர் மோடி முதலாவதாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தம்பித்துரை அனைவரின் ஒத்துழைப்போடும் துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இன்று அவர் துணை சபா நாயகராக தேர்வாகி இருக்கிறார். அவர் ஏற்கனவே துணை சபாநாயகராக பணியாற்றியுள்ளார். அவர் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து காங்கிரசின் மல்லிகார்ஜுன கார்கே, முலாயம் சிங் யாதவ், ராம்விலாஸ் பஸ்வான் உள்பட அனைத்து கட்சி உறுப்பினர்களும் பாராட்டி பேசினார்கள்.

பா.ம.க. எம்.பி. அன்புமணி, புதுவை என்.ஆர்.காங்கிரஸ் எம்.பி.ராதா கிருஷ்ணன், முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரும் பாராட்டி பேசினார்கள். இறுதியாக தம்பித்துரை ஏற்புரை நிகழ்த்தினார்.

 

மேலும் செய்திகள்