முக்கிய செய்திகள்:
கட்டுமான தொழிலாளர் நலன்–சமூக பாதுகாப்புக்கு புதிய திட்டம் : ஜெயலலிதா

சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:–

உழைத்து வாழ்பவனே வணங்கத் தக்கவன். வாழ்த்துக்கு உரியவன்.

அந்த உழைப்பாளிக்கு ஊறு ஏற்படுவது சமுதாயத்தின் நல் வாழ்வையே புரையோடச் செய்வதாகும். என்றார் பேரறிஞர் அண்ணா.

பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிக்கு ஏற்ப, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கும் வகையில், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டத்தினை 1982 ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் இயற்றினார். இந்தச் சட்டத்தின்படி, கட்டுமானத் தொழில்களில் பணிபுரியும் அமைப்பு சாராத் தொழிலாளர்களின் நலன் காக்கும் பொருட்டு, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் 1994 ஆம் ஆண்டு என்னால் உருவாக்கப்பட்டது.

கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தனி நபர் அல்லது நிறுவனம், தான் மேற்கொள்ள உள்ள கட்டடம் மற்றும் கட்டுமானப் பணியின் உத்தேச மொத்த மதிப்பீட்டில் 1 விழுக்காடு தொகையை பங்களிப்புத் தொகையாக வாரிய நிதிக்கு செலுத்த வேண்டும். இந்த நிதியிலிருந்து பதிவு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்று வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டு காலத்தில் மட்டும் 112 கோடியே 96 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய நலத்திட்ட உதவிகள் 3 லட்சத்து 85 ஆயிரத்து 244 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.

கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் சமூகப் பாதுகாப்பினை மேலும் மேம்படுத்தும் வகையில், 127 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் வெளியிடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

1. தற்போது பணியிடத்தில் பணியின் போது நிகழும் விபத்தின் காரணமாக அல்லது பிற இடங்களில் நிகழும் விபத்துகளின் காரணமாக பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர் இறக்கும் நேர்வில், அவர்தம் நியமனதாரருக்கு 1 லட்சம் ரூபாய் நிதி உதவியாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் பணியில் ஈடுபட்டு இருக்கும் போது, பணியிடங்களில் விபத்து ஏற்பட்டு இறக்கும் தொழிலாளர்களுக்கான நிதி உதவி ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

2. தமிழ்நாட்டை சார்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் மட்டுமே தற்போது தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்கிறார்கள். வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்வதற்கான நடைமுறைகளை வெளி மாநில தொழிலாளர்கள் பூர்த்தி செய்ய இயலாத நிலை உள்ளதால், அவர்களால் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள முடியவில்லை. இன்றைய சூழலில், பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்கள் கட்டுமானத் தொழிலில் அதிக அளவில் ஈடுபட்டுள்ளதைக் கருத்தில் கொண்டும், வாரியத்தின் நலத்திட்ட உதவிகள் அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதன் அடிப்படையிலும், வெளி மாநிலத் தொழிலாளர்களால் தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் மற்றும் வேலை அளிப்போரின் சான்றிதழ் ஆகியவற்றை மட்டும் பரிசீலித்து, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் அவர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்யப்படுவார்கள்.

3. கட்டுமானப் பணியிடங்களில் சுமை தூக்கிப் பொறி, போக்குவரத்து சாதனங்கள் அல்லது வாகனங்கள் ஆகியவற்றை இயக்குவதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை அளிப்போரால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது.

இதர கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு இவ்வசதி இல்லை. எனவே, பாலங்கள், சாலைகள் மற்றும் கட்டடங்கள் கட்டும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அவர்களின் பணியிடம் தேடி சுகாதார சேவைகள் வழங்கும் வகையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஆய்வக வசதி மற்றும் பல்வேறு பரிசோதனைகளுக்கான வசதிகளுடன் கூடிய 15 நகரும் மருத்துவமனைகள், பிற மாவட்டங்களில் 35 நகரும் மருத்துவமனைகள் என மொத்தம் 50 நகரும் மருத்துவமனைகள் 19 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு நகரும் மருத்துவமனையிலும் ஓர் ஆண் மருத்துவர், ஒரு பெண் மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர், உதவியாளர் போன்றவர்கள் அடங்கிய ஒரு மருத்துவக் குழு இருக்கும்.

4. தற்போது கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் அனைவருக்கும் அவர்கள் பணிபுரியும் இடங்களில் கல்வி வசதி அளிக்க இயலாத நிலை உள்ளது. பெரும்பாலான கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் அவர்களின் குழந்தைகள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளது தான் இதற்குக் காரணம். எனவே, அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்படும் மையங்களில் கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி பெற ஏதுவாக, உரிய வாகன வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

5. கட்டுமானப் பணியிடத்தில் 50 அல்லது அதற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்தால், வேலை அளிப்பவரால் குழந்தைகள் காப்பகம் ஏற்படுத்தப்பட வேண்டும். குறைவான எண்ணிக்கையில் பெண் தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில் இவ்வசதி கிடைப்பதில்லை. மேலும், பெரும்பான்மையான தொழிலாளர்கள் வேலைக்காக அடிக்கடி இடம் பெயர்ந்து செல்வதால் அவர்களது சொந்த இருப்பிடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள அங்கன்வாடி வசதிகளையும் அவர்களால் பெற இயலவில்லை.

எனவே, கட்டுமானத் தொழிலாளர்களுடைய குழந்தை களின் ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சிக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், கட்டுமானப் பணிகள் அதிக அளவில் நடைபெறும் 50 இடங்களில் அங்கன்வாடி மையங்கள் துவங்கப்படும். ஒவ்வொரு அங்கன்வாடி மையமும் சுமார் 400 சதுர அடியில், 20 குழந்தைகளைப் பேணும் வகையில் பொதுப்பணித் துறையினரால் அமைக்கப்படும். இந்த அங்கன்வாடி மையங்களில் 6 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரையுள்ள குழந்தைகளுக்கு இணை உணவு வழங்கப்படும். 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பருப்பு வகைகள், தானியங்கள், எண்ணெய், காய்கறிகள் அடங்கிய சூடான, சத்தான, சமைத்த மதிய உணவு வழங்கப்படும். உணவுடன் திங்கள், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் ஒரு முட்டையும், செவ்வாய்க் கிழமையன்று கடலைப் பருப்பு அல்லது பச்சைப் பயிறு உணவும், வெள்ளிக் கிழமையன்று உருளைக்கிழங்கு சேர்த்த உணவும் வழங்கப்படும்.

அவர்களை பள்ளிக்குச் செல்ல தயார்படுத்த 2 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பாலர் பள்ளி வசதி செய்து தரப்படும். கூடுதலாக மருத்துவ பரிசோதனை, தடுப்பூசி, வைட்டமின் ‘ஏ’ மாத்திரை, மருத்துவ மற்றும் சுகாதாரக் கல்வி ஆகியவை குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு வழங்கப்படும். மேலும் தாய்-குழந்தை இணைப்பு மருத்துவ அட்டை பயனாளிகளுக்கு வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்காக ஆண்டு ஒன்றுக்கு 2 கோடியே 51 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

6. பொதுவாக, கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வேலை அளிப்பவரால் பணி இடத்திற்கு அருகில் தற்காலிக இருப்பிட வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் தங்கும் இட வசதிகள் பாதுகாப்பு அற்றதாக உள்ளன. மேலும் சிறிய கட்டுமான நிறுவனங்கள் அதற்கான வசதிகளை செய்து கொடுப்பதே இல்லை. இந்த சிரமங்களைப் போக்கிடும் வகையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், 5 இடங்களில் தலா 1,000 தொழிலாளர்கள் தங்கும் வகையிலும், திருச்சிராப்பள்ளி, சேலம், மதுரை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் தலா 500 தொழிலாளர்கள் தங்கும் வகையிலும் என மொத்தம் 7,000 தொழிலாளர்கள் தங்கும் வகையில் 9 இடங்களில் 105 கோடி ரூபாய் செலவில் தூங்கும் அறைகள் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தால் பொதுப்பணித் துறை மூலம் கட்டப்படும். இவை கட்டப்படும் வளாகங்களில் அம்மா உணவகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சலவை செய்யும் வசதி, குழந்தைகள் மற்றும் முதியோர் பாதுகாப்பு மையம், வங்கி தொடர்பு சேவை, படிப்பகம், சுகாதார மையம், பொழுதுபோக்கு மையம் ஆகியவை ஏற்படுத்தப்படும்.

எனது தலைமையிலான அரசின் மேற்காணும் நடவடிக்கைகள் மூலம், கட்டுமானத் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு மேம்படுத்தப்படுவதுடன், அவர்கள் கூடுதல் வசதியினை பெறவும் வழி வகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்