முக்கிய செய்திகள்:
ரூ.45 கோடியில் 15 புதிய வட்டம்: ஜெயலலிதா

முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:–

அரசின் சட்ட திட்டங்களை நிறைவேற்றும் முக்கிய கருவியாகவும், மக்களை நாடிச் சென்று உதவிகள் புரியும் ஆபத்பாந்தவனாகவும், அரசாங்கத்தின் ஆணிவேராகவும், நிர்வாகத்தின் முதுகெலும்பாகவும், மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிப்பதுமான வருவாய்த் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தும் முனைப்பான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

பொதுமக்களின் பயண நேரத்தைக் குறைக்கும் வகையிலும், காலதாமத மின்றி வருவாய்த் துறையின் சேவை மக்களை விரைந்து அடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும், புதிய கோட்டங்களை உருவாக்குதல், புதிய வட்டாட்சியர் அலுவலகங்களை உருவாக்குதல், ஒவ்வொரு கிராமத்திற்கும் தனியாக கிராம நிருவாக அலுவலர்களை நியமித்தல் போன்ற எண்ணற்ற நடவடிக்கைகளை கடந்த மூன்று ஆண்டுகளாக எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, வருவாய்த்துறையின் சேவை மக்களுக்கு விரைந்து கிடைத்திடும் வகையில், நடப்பு ஆண்டில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் மற்றும் பூந்தமல்லி வட்டங்களை சீரமைத்து ஆவடியில் ஒரு புதிய வட்டமும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் வட்டத்தினைப் பிரித்து வாலாஜபாத்தில் ஒரு புதிய வட்டமும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் வட்டத்தினைப் பிரித்து மரக்காணத்தில் ஒரு புதிய வட்டமும், கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் வட்டத்தினைப் பிரித்து புவனகிரியில் ஒரு புதிய வட்டமும், சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் வட்டத்தினைப் பிரித்து பெத்தநாயக்கன் பாளையத்தில் ஒரு புதிய வட்டமும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல் வட்டத்தினைப் பிரித்து சேந்தமங்கலத்தில் ஒரு புதிய வட்டமும்,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி மற்றும் போச்சம்பள்ளி ஆகிய வட்டங்களைச் சீரமைத்து பர்கூரில் ஒரு புதிய வட்டமும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர், ஆரணி மற்றும் வந்தவாசி வட்டங்களைச் சீரமைத்து சேத்துப்பட்டில் ஒரு புதிய வட்டமும் மற்றும் செய்யாறு வட்டத்தினைப் பிரித்து வெம்பாக்கத்தில் ஒரு புதிய வட்டமும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் மற்றும் குளத்தூர் வட்டங்களைச் சீரமைத்து விராலிமலையில் ஒரு புதிய வட்டமும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை வட்டத்தினைப் பிரித்து காளையார்கோயிலில் ஒரு புதிய வட்டமும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் மற்றும் கடலாடி ஆகிய வட்டங்களைச் சீரமைத்து கீழக்கரையில் ஒரு புதிய வட்டமும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, ராஜபாளையம் மற்றும் சாத்தூர் ஆகிய வட்டங்களைச் சீரமைத்து வெம்பக்கோட்டையில் ஒரு புதிய வட்டமும், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோயில் வட்டத்தினைப் பிரித்து திருவேங்கடத்தில் ஒரு புதிய வட்டமும் மற்றும் தென்காசி, சங்கரன்கோயில், சிவகிரி மற்றும் செங்கோட்டை ஆகிய வட்டங்களைச் சீரமைத்து கடையநல்லூரில் ஒரு புதிய வட்டமும்

என மொத்தம் 15 புதிய வட்டங்கள் 45 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இத்துடன் தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் 254 வட்டங்களைச் சேர்த்து மொத்தம் 269 வட்டங்கள் செயல்படும்.

எனது தலைமையிலான அரசின் இந்த அறிவிப்பின் மூலம், பொதுமக்களுக்கு, வருவாய்த் துறையினரின் சேவை விரைந்து கிடைக்கவும், வருவாய்த் துறையினர் தங்கள் சேவையை எளிதாகவும், விரைவாகவும், திறம்படவும் பொதுமக்களுக்கு ஆற்றவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்