முக்கிய செய்திகள்:
அனுமதி பெறாமல் காப்பகம் நடத்தினால் 2 ஆண்டு ஜெயில்: சட்டசபையில் மசோதா தாக்கல்

விடுதிகளில் தங்கும் பெண்கள், குழந்தைகளை பாதுகாக்கவும், விடுதி மற்றும் காப்பகங்களை ஒழுங்குப்படுத்துவதற்காகவும் சட்டசபையில் இன்று அமைச்சர் வளர்மதி ஒரு சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார். அந்த சட்ட மசோதாவில் கூறியிருப்பதாவது:–

பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாத்து அவர்களது நலனுக்காக அரசு முழு பொறுப்பேற்று பாதுகாப்பு அளிக்க முக்கியத்துவம் அளிக்கிறது.வீட்டில் இருந்து தொலை தூரங்களில் வசிக்கும் பெண் குழந்தைகளும், வளர்பருவ சிறுமிகளும், பெண்களும் வழக்கமாக தங்கக்கூடிய குழந்தைகள் காப்பகங்கள், விடுதிகள் போன்றவற்றில் தங்கியுள்ளனர்.

இத்தகைய தங்கும் விடுதிகளை பல்வேறு நிறுவனங்கள் மட்டுமின்றி தனிநபர்களும் நடத்துகின்றனர். இங்கு தங்கியிருக்கும் பெண்கள், குழந்தைகளை பாதுகாப் பது அரசின் கடமை என் பதால் தங்கும் விடுதி காப்பகங்கள் அதை நடத்தும் நிறுவனங்களை ஒழுங்குப் படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி காப்பகம், விடுதிகளை அனுமதியில்லாமல் யாரேனும் நடத்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.காப்பகங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்ய தவறினால் காப்பக உரிமையாளர், மேலாளர் மற்றும் அதன் பொறுப்பாளர்களுக்கு 2 வருட சிறைத்தண்டனை, ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

2–ம் முறை குற்றமாக கருதப்பட்டால் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இதுபோன்ற பல்வேறு விதிகள் இந்த சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் உடல் உழைப்பு தொழிலாளர்களை பாதுகாக்கும் திருத்த சட்ட முன் வடிவை அமைச்சர் மோகன் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில், கட்டிடப்பணி கட்டும் அனுமதிக்காக ஒருவர் விண்ணப்பம் செய்யும் போது கட்டிடத்தின் கட்டுமான மதிப்பு செலவில் 1 சதவீதத்தை உடல் உழைப்பு தொழிலாளர்களின் நலனுக்காக ஒதுக்க வேண்டும். தமிழ் நாட்டில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் மத்திய அரசிடம் இருந்தும் அதன் பொறுப்பு நிறுவனங்களிடம் இருந்தும் இத்தகைய பங்களிப்பை வசூலிக்க போதுமான வழிமுறை இல்லை. எனவே அவர்களிடம் இருந்தும் இதே போல் பங்களிப்பை வசூலிக்க இந்த சட்டதிருத்தம் வகை செய்கிறது.

உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக சட்டங்களில் துணை வேந்தரை நீக்குவதற்கான வகை முறை இல்லை. 1973–ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகள் மற்றும் பிற விதிகள் இதில் பொருந்தவில்லை. எனவே துணை வேந்தரை நீக்குவதற்கு ஏற்ப சட்டங்களை பொருந்ததக்கவகையில் திருத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்