முக்கிய செய்திகள்:
சென்னை, காஞ்சீபுரம், திருப்பூர், சேலம் மற்றும் தஞ்சாவூர் : ஒருங்கிணைந்த பதிவுத்துறை வளாகம் ஜெயலலிதா

முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:–

வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறைகளின் மூலம் கிடைக்கும் வருவாயினைப் பெருக்கும் வகையிலும், பணியாளர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கூடுதல் வசதிகளை அளிக்கும் வகையிலும், கீழ்க்காணும் திட்டங்களை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

1. வணிக வரித்துறை அலுவலகங்களுக்கு வருகை புரியும் வணிகர்களுக்கு கூடுதல் வசதி செய்திடும் வகையிலும், பணியாளர்கள் பணிபுரிவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கும் வகையிலும், கடந்த மூன்று ஆண்டுகளில் 45 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் 67 அலுவலகங்களை உள்ளடக்கிய 33 கட்டடங்கள் கட்ட அனுமதிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் 11 கட்டடங்கள் இதுவரை என்னால் திறந்து வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில், சென்னை நகரில் 70 வணிகவரி அலுவலகங்களை உள்ளடக்கிய அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த இரண்டு வணிக வரி அலுவலகங்கள் 60 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2. காவல் துறை, போக்குவரத்துத் துறை, வருவாய் துறை, வணிக வரித்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆகிய துறைகளின் சார்பில் தனித்தனியே சோதனைச் சாவடிகள் செயல்படுவதன் காரணமாக, சரக்கு வாகனங்களை சரிவர சோதனைக்கு உட்படுத்த இயலாமல் போகிறது. இதனால் அரசுக்கு வரி இழப்பு ஏற்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு, 120 கோடி ரூபாய் செலவில் வணிக வரித்துறை, போக்குவரத்துத் துறை மற்றும் இதர துறைகளுடன் இணைந்து அனைத்து துறைகளுக்கான ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி ஒன்று ஓசூரில் நிறுவப்படும்.

3. தற்போது, வணிக வரி ஆணையர் அலுவலகம், சென்னை எழிலகத்தில் நான்காம் தளத்தில் இயங்கி வருகிறது. அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் திறம்பட பணியாற்றவும், வணிக வரித் துறையை கணினிமயம் ஆக்குவதற்கும் வணிகவரி ஆணையர் அலுவலகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, 7,965 சதுர அடி பரப்பிலான வணிகவரி ஆணையர் அலுவலகம் 1 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

4. பாரம்பரியமிக்க துறையான பதிவுத் துறை அலுவலகங்கள் அனைத்தும் தனியார் கட்டடங்கள், பழுதடைந்த அரசுக் கட்டடங்கள் மற்றும் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசுக் கட்டடங்களில் இயங்கி வருவதைக் கருத்திற் கொண்டு, வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகங்கள் அனைத்திற்கும் 5 ஆண்டு காலத்திற்குள் சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில், 104 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் 216 அலுவலகங்களை உள்ளடக்கிய 156 கட்டடங்கள் கட்ட அனுமதிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை, காஞ்சீபுரம், திருப்பூர், சேலம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய ஐந்து இடங்களில் 10 சார்பதிவாளர் அலுவலகங்களை உள்ளடக்கிய 5 ஒருங்கிணைந்த பதிவுத் துறை வளாகங்கள் மற்றும் தனித்தனியாக 25 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறிவிப்புகள், அலுவலகப் பணியாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் பயனுற வழி வகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்