முக்கிய செய்திகள்:
சொகுசு பேருந்துகள்: அமைச்சர் அறிவிப்பு

சட்டசபையில் இன்று சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-

108 திவ்ய தேசங்களில் முதலாவதாக விளங்கும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலுக்கு தினந்தோறும் வருகை தரும் எண்ணற்ற பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி ஸ்ரீரங்கத்தில் அண்மையில் திறக்கப்பட்ட யாத்ரி நிவாஸ் அமைந்துள்ள பஞ்சக்கரை சாலையில் மின்விளக்கு வசதிகள் சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி இக்கோவில் அமைந்துள்ள மலைக்கோட்டையில் ரூ.50 லட்சம் செலவில் ஒளிவிளக்குகள் அமைக்கப்படும்.ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் சுற்றுலாத் தலங்களில் ரூ.66 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு துணை திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். ரூ.10 லட்சம் செலவில் சுற்றுலாத் தலங்களின் தூய்மை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம், முகாம்கள் நடத்தப்படும்.

ஏலகிரியில் உள்ள யாத்ரி நிவாஸ் கட்டிடம் தமிழ்நாடு ஓட்டலாக மாற்றப்படும். திருச்செந்தூரில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு, ரூ.1 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்படும் சுற்றுலாவிற்கு ரூ.1 கோடியே 70 லட்சத்தில் 5 புதிய சொகுசு பேருந்துகள் வாங்கப்படும். இவ்வாறு அமைச்சர் சண்முகநாதன் அறிவித்தார்.

மேலும் செய்திகள்