முக்கிய செய்திகள்:
கியாஸ் சிலிண்டர் விபத்தை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் காமராஜ்

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் தினகரன் (தே.மு.தி.க.) சமையல் எரிவாயு கசிவினால் ஏற்படும் விபத்தை கட்டுப்படுத்துவது குறித்து கவன ஈர்ப்பு கொண்டு வந்தார்.

இதற்கு பதில் அளித்து உணவுதுறை அமைச்சர் காமராஜ் பேசியதாவது:–

மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை எண்ணை நிறுவனங்கள் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நிரப்பப்பட்டு ஏஜெண்டுகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. அனைத்து சிலிண்டர்களும் முழுமையான பரிசோதனைக்கு பிறகே விநியோகம் செய்யப்படுகிறது.வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் வழங்கும் போது சிலிண்டரில் உள்ள முகப்பு வால்வில் கசிவு உள்ளதா? என்றும் அவை சரியான எடையுள்ளதா? என்றும் பரிசோதித்த பின்னரே நுகர்வோர்களுக்கு வழங்கப்படுகிறது.

என்றாலும் இரவு நேரத்தில் சிலிண்டர் ரெகுலேட்டரை மூடாமல் விடுவது எரிவாயு இணைப்பு குழாய்களில் ஏற்பட்டுள்ள கசிவுகளை கவனிக்காமல் விட்டுவிடுவது; எரிவாயு கசிவை கவனிக்காமல் மின்சாதனத்தை பயன்படுத்து வது, வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரில் இருந்து தொழில் ரீதியான எரிவாயு சிலிண்டர்களுக்கு சட்டத்துக்கு புறம்பாக எரிவாயுவை மாற்றுவது, தரசான்று வழங்கப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தாமல் இருப்பது போன்ற கவனக்குறைவான செயல்களால் விபத்து ஏற்படுகிறது. எனவே நுகர்வோர் எரிவாயு கசிவு ஏற்பட்டால் மின்சாதன பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். ஜன்னல், கதவுகளை உடனடியாக திறந்து காற்றோற்றமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். உடனடியாக எண்ணை நிறுவனங்களின் உதவி சேவை மையத்துக்கு தொடர்பு கொண்டு கசிவுகளை சரி செய்ய வேண்டும்.

இதற்கான புகார்களை 155233 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இது 3 எண்ணை நிறுவனங்களுக்கும் பொதுவானது. 24 நேரமும் இதில் புகார் செய்யலாம். மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எண்ணை நிறுவனங்கள் எரிவாயு முகவர்கள், நுகர்வோர் ஆணையும் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன. தீயணைப்பு படையினர் மூலம் பள்ளி கல்லூரிகளில் இது தொடர்பான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வருகின்றன.

முதல்–அமைச்சரின் உத்தரவுபடி எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான விபத்துக்களை தடுக்க கடுமையான கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முறைகேடாக எரி வாயு சிலிண்டர்களை பயன்படுத்திய 11,140 பேரிடம் ரூ.1 கோடியே 43 லட்சம் மதிப்புள்ள எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 27 பேர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்து காப்பீடு மூலம் ரூ.10 லட்சம் வழங்கவும் பொது காப்பிடு மூலம் நுகர்வோருக்கு பயன் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கையால் கடந்த 3 ஆண்டுகளில் சிலிண்டர் கசிவு விபத்துகளால் ஏற்படும் இறப்பு குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்