முக்கிய செய்திகள்:
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் போரை நிறுத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் வைகோ வற்புறுத்தல்

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

பாலஸ்தீன நாட்டின் காசா பகுதி மீது இஸ்ரேல் கடந்த 27 நாட்களாக கொடூரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் விமானங்களின் குண்டு வீச்சாலும், ஏவுகணை தாக்குதலாலும் இதுவரை இரண்டாயிரம் அப்பாவி இஸ்லாமிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் படுகாயமுற்று உரிய சிகிச்சை பெற முடியாமல், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்ட 1.8 லட்சம் மக்கள் ஐ.நா. முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஐ.நா. கட்டுப்பாட்டில் உள்ள அல் ஷீபா மருத்துவமனையில், குண்டுவீச்சில் படுகாயமுற்ற பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் மருத்துவ உதவி வழங்கவும், உணவு அளிக்கவும் இயலாமல் ஐ.நா. அதிகாரிகள் திணறுகின்றனர்.

ஈவு இரக்கமற்ற இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் ஐ.நா. பாதுகாப்பு முகாம்கள் மீதும் நடத்தப்பட்டது மிகவும் கொடூரமான அக்கிரமச் செயலாகும். காசா பகுதியில், ராபா நகரில் பள்ளிக் கட்டடத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்கியதில், அந்தக் கட்டடம் விழுந்து நொறுங்கியதில் ஆயிரக்கணக்கானவர்கள் சிக்கிக் கொண்டனர். பலர் கொல்லப்பட்டனர். இது ஜெனீவா விதிகளுக்கும், சர்வதேச சட்டங்களுக்கும் எதிரான கொடுஞ்செயலாகும்.

இலங்கை தீவில் தமிழ் ஈழத்தில் மருத்துவமனைகள், பள்ளிக் கட்டடங்கள் மீது, பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்புத் தேடி தங்கிய பதுங்குக் குழிகள் மீது சிங்கள இராணுவம் விமானக் குண்டு வீச்சும், பீரங்கித் தாக்குதலும் நடத்தியதில் சிறுவர் சிறுமிகள், குழந்தைகள், நோயாளிகள் உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கானோர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதைத் தடுப்பதற்கு ஐ.நா. மன்றமோ, அனைத்துலக நாடுகளோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மனித குலத்தின் மனசாட்சி செயலற்று உறைந்து போனதின் அடையாளமாகும்.

அதே போன்ற அரக்கத்தனமான தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் இன்று காசா பகுதியில் நடத்துகிறது.

இஸ்ரேல் நடத்தி வரும் இரக்கமற்ற போரினால் பாலஸ்தீனிய மக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகளின் மரண ஓலம், உலகில் மனசாட்சி உள்ளவர்களை உலுக்கிக் கொண்டே இருக்கிறது. அமெரிக்காவின் முழு ஆதரவைப் பெற்றுக் கொண்டு, இஸ்ரேல் நடத்தி வரும் அக்கிரமமான போரை முடிவுக்குக் கொண்டு வர ஐ.நா. மன்றம் எடுத்த முன் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. மத்திய கிழக்கில் அமைதியின்மைக்கு முழு பொறுப்பேற்க வேண்டிய நாடு இஸ்ரேல்தான்.

2006 ஆம் ஆண்டிலிருந்து காசா மேற்கு கரை பகுதிகள் பாலஸ்தீனத்தின் தன்னாட்சி கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. ஆனாலும், இஸ்ரேல் பாலஸ்தீன தன்னாட்சி பகுதிகளை கடல், வான், மற்றும் நிலம் வழியாக தனது கட்டுப்பாட்டில்தான் வைத்திருக்கிறது. இஸ்ரேல் ராணுவத்தின் முற்றுகையில்தான் பாலஸ்தீனியர்கள் எப்போதும் இருந்து வருகின்றனர். பாலஸ்தீனிய மீனவர்களை கடலின் ஆழத்துக்குச் சென்று மீன் பிடிக்கக் கூட இஸ்ரேல் அனுமதிப்பது இல்லை. காசா பகுதிக்குள் அவ்வப்போது இஸ்ரேலிய ராணுவம் ஊடுருவுவதும், பாலஸ்தீனியர்களைச் சுட்டுக் கொல்வதும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், பாலஸ்தீனிய மக்களுக்காகப் போராடி வரும் ஹமாஸ் இயக்கத்திற்கு எதிரான ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் அப்பாவி பொதுமக்களை இஸ்ரேலிய ராணுவம் கொன்று குவித்து வருகிறது.

இந்தியாவுக்கான பாலஸ்தீன நாட்டின் தூதர் நேற்று ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, இஸ்ரேல் நடத்தி வரும் போரை நிறுத்துவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் பேச வேண்டும். பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வரும் இந்தியா, உலகப் பிரச்சினைகளில் தனது முகாமையான பங்களிப்பைச் செய்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். பாலஸ்தீன தூதரின் கோரிக்கை முற்றிலும் நியாயமானது.

நாடாளுமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரியபோது, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அதனை நிராகரித்தது மட்டுமின்றி, இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். அதில் இந்தியா தலையிடாது என்று பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டார்.

ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் சிங்கள அரசால் கொல்லப்பட்ட போது, காங்கிரஸ் கூட்டணி அரசு வேடிக்கை பார்த்ததைப் போலவே, பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்படுவதையும் பா.ஜ.க. அரசு மெளன சாட்சியாக வேடிக்கை பார்க்கப் போகிறதா?

பாலஸ்தீன நாட்டின் விடுதலைக்காகப் போராடிய யாசர் அராபத்திற்கு இந்தியா பல ஆண்டுகளாக ஆதரவுக் கரம் நீட்டியதை மறந்துவிடக்கூடாது. மத்திய கிழக்கில் இஸ்ரேலின் அடாவடித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இதற்காக இந்திய அரசு தனது வலுவான குரலை எழுப்ப வேண்டும். இஸ்ரேல் நாட்டுடனான பொருளாதார வர்த்தக உறவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாலஸ்தீனியர்களை இந்தியா கைவிட்டது என்ற பழிக்கு ஆளாகாமல், நரேந்திர மோடி அரசு உடனடியாக இஸ்ரேல் நடத்தி வரும் போரை நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்