முக்கிய செய்திகள்:
மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

பொருளாதாரம் மற்றும் வணிகத் துறைகளில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் பாதையிலேயே நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசும் பயணிக்கத் தொடங்கி இருப்பதைக் காண முடிகிறது. தற்போது அந்தப் பட்டியலில், தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்களும் இடம் பெற்றுள்ளன.

பிரதமர் தலைமையில் ஜூலை 30–ந்தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், முக்கியமான மூன்று தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் கொண்டுவர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

இந்தியாவில் இந்தச் சட்டங்கள் அனைத்தும் தொழிலாளர் நலன் காக்கும் சட்டங்களாக நடைமுறையில் இருக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெருமுதலாளிகளும் தங்கள் விருப்பப்படி தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்கு, நடைமுறையில் உள்ள 44 தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும், சில சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்திய அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளன.

பாரதீய ஜனதா அரசு நாடாளுமன்றத்தில் பெற்று இருக்கின்ற அறுதிப் பெரும்பான்மையை வைத்துக் கொண்டு, பன்னாட்டு ஏக போக நிறுவனங்களுக்காக இந்தியத் தொழிலாளர்களின் நலன்களைக் காவுகொடுக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதை ஏற்க முடியாது. 8 மணி நேரம் பணி என்பது, உலகத் தொழிலாளர்கள் உயிர்த் தியாகம் செய்து, ரத்தம் சிந்தி போராடிப் பெற்ற உரிமை ஆகும்.

அந்த உரிமையைப் பறிக்கும் விதத்தில், கூடுதல் பணி நேரம் வாரத்தில் 50 மணி நேரத்தில் இருந்து 100 மணி நேரமாக உயர்த்துவதற்கு தொழிற்சாலை சட்டத்திருத்தம் வகை செய்கிறது. தொழிலாளர்கள் 90 நாட்கள் வேலை செய்தாலே சட்டப்படிப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று இருப்பதை, 240 நாட்களாக உயர்த்துவதற்கும், 19 தொழிலாளர்கள் வேலை செய்தாலே தொழிற்சாலைச் சட்டமும், தொழிலாளர் சட்டமும் செல்லுபடி ஆகும் என்பதை, 40 தொழிலாளர்கள் இருந்தால் மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தொழி லாளர் சட்டம் 1988 திருத்தம் செய்யப்படுகிறது.

தொழிலாளர்கள் போராடிப் பெற்ற சட்டப்படியான உரிமைகளைப் பலிகொடுத்து, பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகத் தொழிலாளர் சட்டங்களிலும் மற்றும் தொழிற்சாலைச் சட்டங்களிலும் திருத்தம் கொண்டு வரும் முயற்சியை பா.ஜ.க. அரசு உடனே கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்