முக்கிய செய்திகள்:
மோடி-ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கோரியது இலங்கை

பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தி சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியானது தொடர்பாக இலங்கை அரசு மன்னிப்பு கோரியது.

தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு அடிக்கடி கடிதம் எழுதுவதை கொச்சைப்படுத்தி இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் கட்டுரை வெளியாகியிருந்தது.

ஜெயலலிதாவின் தாளத்திற்கு மோடி ஆட மாட்டார் என்று அதில் தரம் தாழ்ந்த கருத்துக்களுடன் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதுவதுபோன்று, மேற்பகுதியில் பிரதமர் மோடி இருப்பது போன்ற படத்தையும் பதிவேற்றம் செய்திருந்தனர். இந்த கட்டுரைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அந்த கட்டுரை மற்றும் புகைப்படம் அகற்றப்பட்டது.

இருப்பினும் இலங்கை அரசு தனது தவறை உணர்ந்து நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், இலங்கை பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியான கட்டுரைக்கு அதிருப்தி தெரிவிக்கும் வகையில் இலங்கை தூதரை அழைத்து கண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் கட்டுரையை வெளியிட்டதற்காக இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது.

இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சர்ச்சைக்குரிய கட்டுரை மற்றும் படம் உரிய அதிகாரிகளின் அனுமதியின்றி வெளியிடப்பட்டுள்ளது. அந்த கட்டுரை இலங்கை அரசு அல்லது பாதுகாப்புத்துறையின் நிலையை பிரதிபலிக்கவில்லை. அந்த கட்டுரை இப்போது நீக்கப்பட்டுவிட்டது. இந்த கட்டுரை வெளியானதற்காக இந்திய பிரதமர் மற்றும் தமிழக முதல்வரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்