முக்கிய செய்திகள்:
தேமுதிகவுடன் அதிமுக அமைச்சர்கள் வாக்குவாதம்

சட்டசபையில் இன்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.

விவாதத்தை மயிலாடு துறை தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. அருள் செல்வன் தொடங்கி வைத்து பேசினார்.

பேச்சை ஆரம்பிக்கும் போது, கட்சி தலைவர் கேப்டனுக்கு (விஜயகாந்த்துக்கு) நன்றி சொல்லிவிட்டு அதன் பிறகு எனது தொகுதியில் கலைக்கல்லூரியை அறிவித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

அப்போது முதல்– அமைச்சர் ஜெயலலிதா குறுக்கிட்டு கூறியதாவது:–

இந்த அறிவிப்பு வெளியிட்ட போது யாரும் நன்றி சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கவில்லை. என்னைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளையும் அ.தி.மு.க. தொகுதி ஆக தான் நான் கருதுகிறேன்.

அது மட்டுமல்ல. மயிலாடுதுறை தொகுதியை உறுப்பினர் சொந்தம் கொண்டாடுகிறார். வரும் 2016–ஆம் ஆண்டு தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு வெல்லப் போவது திண்ணம் என கூறிக் கொள்கிறேன் என்றார்.

இதன் பிறகு சட்டசபையில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. அருள் செல்வனுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அந்த விவாதம் வருமாறு:–

அருள் செல்வன் (தே.மு.தி.க.):– 2016–ஆம் ஆண்டு தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிட்டு வெல்லப் போவதாக முதல்–அமைச்சர் கூறினார். தமிழக அரசியலில் தொடர்ந்து பார்த்தால் எந்த ஒரு கட்சியும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகு தொடர்ந்து வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. (இதற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் பக்கம் இருந்து எதிர்ப்புக் குரல் கிளம்பியது. பதிலுக்கு தே.மு.தி.க. எம்.எல்.ஏக்களும் எழுந்து ஆட்சேபனை குரல் கொடுத்தனர். இரு தரப்பினரும் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் சபையில் பரபரப்பு நிலவியது. அவர்களை சபாநாயகர் சமாதானப்படுத்தினார்.)

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி:– நடந்து முடிந்த நாடாளு மன்ற தேர்தலில் 44.3 சதவீதம் வாக்குறுதிகளை பெற்று தனி ஒரு ஆளாக நின்று வெற்றி வாகை சூடியவர் புரட்சி தலைவி அம்மா.

அப்போது எதிர்க்கட்சி துணை தலைவர் மோகன்ராஜ் (தே.மு.தி.க) எழுந்து தேர்தல் அதிகாரி குறித்தும், தேர்தல் கமிஷனர் குறித்தும் சில கருத்துக்களை தெரிவித்தார்.

அமைச்சர் நத்தம் விசுவநாதன்:– தேர்தல் கமிஷனை குறை கூற உறுப்பினருக்கு உரிமை இல்லை. அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். ஒரு கட்சி ஒரு முறை டெபாசிட் இழக்கலாம். ஆனால் உங்கள் கட்சி தொடர்ந்து டெபாசிட் இழக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் உங்கள் கட்சியின் சாயம் வெளுத்தது. இடைத் தேர்தலில் உங்கள் கட்சி தோற்றது.

பாராளுமன்ற தேர்தலில் 14 இடங்களில் 10–ல் டெபாசிட் போனது. இப்போது எந்த அடிப்படையில் இவர் பேசுகிறார் என்று தெரிய வில்லை.

அமைச்சர் எஸ்.பி.வேலு மணி:– எங்கள் அம்மா தமிழ் நாட்டில், தனித்து நின்று பிரசாரம் செய்ததால் 2 லட்சம், 3 லட்சம் ஓட்டு வித்தியாசங்களில் அ.தி.மு.க. வினர் வெற்றி பெற்றுள்ளனர்.

அமைச்சர் வைத்திலிங்கம்:– தமிழ்நாட்டில் இருக்கிற அரசியல் கட்சிகளுக்கு நெஞ்சிலே தைரியம் இருந்தால் வரும் தேர்தலிலே தனித்து நிற்க தயாரா? எங்கள் அம்மாவை தவிர யாருக்கும் அந்த துணிவு உண்டா? தனித்து நிற்க தைரியம் யாருக்கும் உண்டா?.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா:– நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 217 தொகுதிகளில் அ.தி.மு.க. தனித்து நின்று போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

அருள்செல்வன் (தே.மு.தி.க.):– அரசியல் வரலாற்றில் வெற்றி, தோல்வி வரும்.

அமைச்சர் விசுவநாதன்:– ஒரு கட்சிக்கு வெற்றி வருவதுண்டு. ஆனால் உங்கள் கட்சி தோல்வியையே தொடர்ந்து பெற்று வருகிறது.

அமைச்சர் காமராஜ்:– 2011 சட்டசபை தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் முதல்–அமைச்சர் அம்மா வாக்கு கேட்டதால் தான் இன்று நீங்கள் எம்.எல்.ஏ. ஆக உள்ளீர்கள்.

அருள் செல்வன்:– முதல்–அமைச்சர் எங்களுக்கு ஓட்டு கேட்டது உண்மை. அதே போல் எங்கள் அன்பு தலைவர் (விஜயகாந்த்) உங்களுக்கு ஓட்டு கேட்டது உண்மை.

அமைச்சர் வைத்திலிங்கம்:– 2011–ம் ஆண்டு தேர்தலில் அவர்களது ஆதரவில் நாங்கள் வெற்றி பெறவில்லை. நீங்கள்தான் அம்மாவின் ஆதரவில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். இது நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் மூலம் நிரூபணமாகியுள்ளது.

அருள் செல்வன்:– 2016–ஆம் ஆண்டு தேர்தல் பற்றி முதல்–அமைச்சர் பேசினார். யார் யாரோடு கூட்டணி. வெற்றி யாருக்கு என்பதெல்லாம் நிச்சயமாக தெரிந்து விடும்.

மேலும் செய்திகள்