முக்கிய செய்திகள்:
உலகில் நல்லிணக்கத்தை பெருக்க உறுதியேற்போம் : ராமதாஸ் வாழ்த்து

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ஈகைத் திருநாளாம் இரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரமலான் திருநாளை ஒரு கொண்டாட்டம் என்பதைவிட முப்பது நாட்கள் பகலில் உண்ணாமலும், பருகாமலும் நோன்பிருந்து மேற்கொள்ளப்படும் பயிற்சி என்பது தான் பொருத்தமானதாகும். இரமலான் நோன்பு பற்றி இறைவன் அவரது திருமறையில், மனித வாழ்க்கையில் அகமும், புறமும் தூய்மையடைய ஒரு பயிற்சிதான் நோன்பு. நோன்பு நோற்றிருக்கும் போது தனக்குச் சொந்தமான உணவையே உண்ணக்கூடாது என்று இறைவன் கூறும்போது, உண்ணாமல் இருக்கிறார்களே.... இப்பயிற்சி பெற்றவர்களா பிறர் பொருளை அநியாயமாக உண்ணாதே என்று இறைவன் சொல்லும்போது அதைப் பின்பற்றாமல் இருப்பார்கள்? என்று குறிப்பிடுகிறார். இதேபோல் நோன்பிருக்கும் போது கடைபிடிக்கப்படும் மற்ற வழக்கங்களும் மனிதர்களை மேன்மை படைத்தவர்களாக மாற்றுகின்றன.

கொடைகளுக்கும், நற்குணங்களுக்கும் உதாரணமாக இஸ்லாமியர்கள் திகழும்போது பாலஸ்தீனத்தில் நிகழும் கொடுமைகள் வேதனையளிக்கின்றன. பாலஸ்தீனம் மட்டுமின்றி உலகம் முழுவதும் அமைதி நிலவ வகை செய்யப்பட வேண்டும். இறைவன் அருளிய திருமறையில் உள்ள அறிவுரைகள் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, மனித நேயத்திலும், நீதி நேர்மையிலும் நம்பிக்கை கொண்ட அனைவரும் கடைபிடிக்க வேண்டியவை ஆகும். அவற்றை கடைபிடித்து, உலகில் அமைதி, வளம், மற்றும் நல்லிணக்கத்தை பெருக்கவும், தீமைகளை ஒழிக்கவும் பாடுபட இந்நன்னாளில் உறுதியேற்போம் இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்