முக்கிய செய்திகள்:
மத்திய அரசுக்கு வைகோ வேண்டுகோள்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்: இந்திய அரசு, உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியத்தின் உத்தரவுகளை ஏற்றுச் செயல்படுத்தி வருவதால், விவசாயத் துறை நலிவை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கின்றது. விவசாயம் மற்றும் பொது விநியோக முறைக்கான அரசு மானியங்களை படிப்படியாகக் குறைத்து, முழுவதுமாக இரத்து செய்திட வேண்டும் என்று உலக வங்கி நிபந்தனை விதிக்கிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மானியங்களைக் குறைத்ததால், யூரியா, ரசாயன உரங்கள் விலை பன்மடங்கு உயர்ந்தன. தற்போது மத்திய அரசு மானியக் குறைப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரமாக்கி வருகிறது. கடந்த ஜூன் மாதம் நடப்பு பருவத்திற்கான நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக, பொதுரக நெல்லுக்குக் குவிண்டால் ரூ.1360 ஆகவும், சன்ன ரக நெல்லுக்கு ரூ.1400 ஆகவும் விலை நிர்ணயம் செய்தது.

இவற்றோடு, தமிழக அரசு ஊக்கத் தொகையாக பொதுரக நெல்லுக்கு ரூ.50 ம், சன்ன ரக நெல்லுக்கு ரூ.70 ம் வழங்கி வருகிறது. இதனால், நடப்புப் பருவத்தில் விவசாயிகள் கொள்முதல் விலை பொது ரகத்திற்கு ரூ.1400 ஆகவும், சன்ன ரகத்திற்கு ரூ.1470 ஆகவும் பெற முடியும்.ஆனால், ஜூலை 8 ஆம் தேதி, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசு வழங்கும் குறைந்தபட்ச ஆதார விலையை மட்டுமே விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும்; மாநில அரசுகள் ஊக்கத் தொகை மற்றும் போனஸ் எதுவும் சேர்த்து வழங்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது. அப்படி வழங்கினால், இந்திய உணவுக் கழகம் சார்பில், மத்தியத் தொகுப்பிற்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய-மாநில அரசுகள் நிர்ணயம் செய்யும் கொள்முதல் விலை கட்டுபடியாகாது. நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 தர வேண்டும் என்று தமிழக விவசாயிகள் கோரி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்கும் ஊக்கத் தொகையை, மத்திய அரசு தடை செய்ய முயற்சிப்பது நியாயம் அற்றது.விவசாயத்திற்கான மானியங்கள் தொடர்வதோடு, நெல் கொள்முதல் விலை அறிவிப்பை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்; தமிழக அரசு விவசாயிகளுக்கு தொடர்ந்து நெல் கொள்முதலுக்கான ஊக்கத் தொகையை அளித்து விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்