முக்கிய செய்திகள்:
வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடம்: ஜெயலலிதா உத்தரவு

சட்டசபையில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:–

வேலை நாடுநர்களின் நலனைக் கருத்தில் கொண்டு; வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய வருவோருக்கு போதிய வசதிகளை அளிப்பதிலும்; அவர்களுக்கு விரைந்து வேலைவாய்ப்புகளை வழங்குவதிலும்; தொழிற்சாலைகளில் பணிபுரிவோரின் பாதுகாப்பினை மேம்படுத்துவதிலும்; அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை அளிப்பதிலும் எனது தலை மையிலான அரசு கண்ணும் கருத்துமாக விளங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற தங்கள் கல்வித் தகுதிகளை பதிவு செய்வதற்கு 37 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் 32 மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.

நான் மூன்றாவது முறையாக தமிழ்நாட்டின் முதல்–அமைச்சராக பொறுப்பேற்ற போது, பெரும்பாலான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கங்கள் வாடகைக் கட்ட டங்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இட நெருக்கடியில் செயல்பட்டு வருவது எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இவற்றிற்கு ஒரு தீர்வு காணும் பொருட்டு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்ட வேண்டும் என முடிவு எடுத்தேன்.

இதன் அடிப்படையில், முதற்கட்டமாக 2011-2012-ஆம் நிதியாண்டில் 10 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கும், 2012-13-ஆம் நிதியாண்டில் 5 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கும் சொந்தக் கட்டடங்கள் கட்ட ஆணையிடப்பட்டது. தற்போது 18 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் சொந்தக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, 2014–2015-ஆம் நிதியாண்டில், ஒரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு 1 கோடியே 65 லட்சம் ரூபாய் வீதத்தில், 8 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில்; காஞ்சிபுரம், விழுப்புரம், திருவாரூர், திருவள்ளூர் மற்றும் தருமபுரி ஆகிய ஐந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு அனைத்து உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழிற்சாலைகள் சட்டம் 1948-ன் கீழ், புதிய தொழிற்சாலைகளை பதிவு செய்து உரிமம் வழங்குதல் மற்றும் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட சுமார் 42,000 தொழிற்சாலைகளின் உரிமங்களை ஆண்டுதோறும் புதுப்பித்தல் போன்ற பணிகளில் நடைமுறையில் உள்ள சிரமங்கள் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன. அரசு சேவைகள், தொழில் முனைவோருக்கு உரிய நேரத்தில் சென்றடைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, உரிமம் வழங்கும் பணி இனிமேல் வலை தளம் மூலம் மேற்கொள்ளப்படும் என்பதையும்; தொழில் வழி பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த விவரங்கள், கோட்பாடுகள் மற்றும் புதிய யுத்திகள் ஆகியவற்றையும் தொழிலாளர், தொழிற் சாலைகள் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் வலை தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவற்றை செயல்படுத்தும் வகையில், 2 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்திற்கென பிரத்யேக வலை தளம் உருவாக்கப்படும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் தொழிலாளர்களின் மருத்துவ சேவையினை மேம்படுத்தும் வகையில், 20 புதிய இடங்களில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களைத் துவக்கியும்; 33 புதிய பகுதிகளை திட்டத்தில் சேர்த்தும்; 1 லட்சத்து 83 ஆயிரத்து 537 தொழிலாளர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் திட்டப்பயன்கள் பெற எனது தலைமையிலான அரசு வழிவகை செய்துள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் 10 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகள் மற்றும் 205 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்கள் மூலம் காப்பீட்டாளர்களுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நடப்பாண்டில், கூடங்குளம், நாரணமங்கலம், திருச்செந்தூர், ஓசூர் (சிப்காட்-11), நெய்வேலி மற்றும் சிவகாசி (நாரணபுரம்) ஆகிய 6 இடங்களில் 4 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக மருந்தகங்கள் துவங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்ட செயலாக்கத்திற்காக 19 மருத்துவர்கள் உள்ளிட்ட 96 பணியிடங்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் 15,884 தொழிலாளர்கள் பயன் பெறுவர்.

எனது தலைமையிலான அரசின் மேற்காணும் நடவடிக்கைகள், அதிக வசதிகளுடன் காற்றோட்டமான சுற்றுச்சூழலில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் செயல்படவும், தொழிலாளர் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வலை தளம் மூலம் அனைவரும் தெரிந்து கொள்ளவும், தொழிலாளர்கள் கூடுதல் மருத்துவச் சேவையினை பெறவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்