முக்கிய செய்திகள்:
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் : ராமதாஸ் தகவல்

தமிழ்நாட்டில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்குப் பதிவு எந்திரத்தில் முறைகேடு நடந்து இருப்பதாகவும் எனவே வாக்கு சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்த கோரியும் தமிழகம் முழுவதும் பா.ம.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.

மாநில தலைவர் ஜி.கே. மணி, ஏ.கே.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:–

மின்னணு வாக்குப்பதிவு மிகப்பெரிய மோசடி. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்பதை பல உலக நாடுகள் நிரூபித்து விட்டன. அமெரிக்கா, ஜெர்மனி உள்பட பல நாடுகள் மீண்டும் வாக்கு சீட்டு முறைக்கு மாறி விட்டது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தவறு செய்ய முடியும் என்று 2001–ல் சுப்ரீம்கோர்ட்டிலேயே வழக்கு தொடர்ந்தார் முதல்–அமைச்சர் ஜெயலலிதா.

பல வட இந்திய தலைவர்களும் வாக்குசீட்டு முறையே வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தி உள்ளனர். நம்பகத்தன்மை இல்லாத வெளிப்படைத்தன்மை இல்லாத மின்னணு வாக்குப் பதிவு முறையை மாற்ற வேண்டும். தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாகவும், மீண்டும் வாக்கு சீட்டு முறையை கொண்டு வரக்கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம்.இதுகுறித்து வட இந்திய தலைவர்களிடமும் எடுத்துச் செல்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்