முக்கிய செய்திகள்:
நபிகள் நாயகம் நற்பண்புகளை போதித்தது மட்டுமல்லாமல் அதன்படி வாழ்ந்தும் காட்டியவர் : ஜெயலலிதா பேச்சு

நபிகள் நாயகம் போதனைகளை அனைவரும் கடைப்பிடித்து வாழ்ந்தால் இந்தியா அமைதிப்பூங்காவாக விளங்கும் என்று அ.தி.மு.க. இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசினார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா ஏற்பாட்டின் படி, அ.தி.மு.க. சார்பில் புனித ரமலான் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வக்பு வாரிய தலைவரும், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளருமான தமிழ்மகன் உசேன் வரவேற்றார். பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.அப்துல் ரகீம் வாழ்த்துரை வழங்கினார். அ.தி.மு.க. சிறுபான்மை நலப்பிரிவு செயலர் ஆர்.அன்வர்ராஜா எம்.பி. நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் ஜெயலலிதா சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

இஸ்லாம் மார்க்கம் என்பது நல்வழி மார்க்கம். ஒற்றுமையுடன் இருப்பது, நல்ல காரியங்கள் செய்வது, தர்மம் செய்வது, சலாம் சொல்ல முந்திக்கொள்வது, இஸ்லாமியர், இஸ்லாமியர் அல்லாதவர் என்று பாராமல் அனைவரிடத்திலும் அன்புடன் நடந்து கொள்வது, கோபத்தை அடக்குவது, மன்னிப்பது, சண்டை சச்சரவுகளைத் தீர்த்து வைப்பது போன்ற நற்பண்புகளை போதித்தவர் நபிகள் நாயகம்.

நபிகள் நாயகம் நற்பண்புகளை மட்டும் நமக்கு போதிக்காமல் தீயவர்களையும் நல்வழிப்படுத்தியவர். ஒரு சமயம் ஒரு கூட்டத்தில் நபிகள் நாயகம் பேசிக்கொண்டிருந்தார். அந்த கூட்டத்தில் ஒரு குடிகாரர் எழுந்திருந்து, நபிகள் நாயகத்தைப் பார்த்து, எனக்கு இஸ்லாத்தில் இடம் உண்டா? என்று வினவினான்.

உடனே பக்கத்தில் இருந்த ஒருவர், இஸ்லாத்தில், குடிகாரருக்கு இடம் கிடையாது என்று சொன்னார். இதைக் கேட்ட நபிகள் நாயகம், அந்த நபரை உட்காரச் சொல்லிவிட்டு, குடிகாரரைப் பார்த்து, “உனக்கு இஸ்லாத்தில் இடம் உண்டு” என்று கூறினார்.

உடனே குடிகாரர், நான் இஸ்லாத்தில் சேரலாமா? என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த நபிகள் நாயகம், “கட்டாயம் சேரலாம். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. இறைவனை தொழுகிற போது மட்டும் குடிக்கக் கூடாது” என்று கூறினார். அந்த குடிகாரரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். இஸ்லாத்தில் சேர்ந்தார். தொழுகைக்கு போகிற போது மட்டும் குடிக்க முடியாத நிலைமை அவருக்கு ஏற்பட்டது.

சிறிது நாட்கள் கழித்து அந்த நபரை பார்த்த நபிகள் நாயகம், “காலையில் மட்டும் தொழுதால் போதாது. மாலையிலும் தொழ வேண்டும்” என்று கூறினார். இரண்டு வேளையும் தொழுகைக்கு போக ஆரம்பித்த அந்த நபர் இரண்டு நேரமும் குடிக்காமல் இருந்தார். பின்னர் சிறிது நாட்கள் கழித்து, “மேலும், பகலிலும் ஒரு முறை தொழ வேண்டும், அந்தியிலும் ஒரு முறை தொழ வேண்டும்” என்று அந்த நபரிடம் கூறினார் நபிகள் நாயகம்.

பின்னர் அந்த நபர் ஐந்து வேளையும் தொழ ஆரம்பித்துவிட்டார். அதனால், அவரால் நாள் முழுவதும், காலை முதல், மாலை வரை, குடிக்க முடியாமல் போய்விட்டது. ஒரு நாள் தொழுகைக்கு போய்க்கொண்டிருந்த அந்த நபரைப் பார்த்து, இறைவனைத் தொழப் போகிற போது மட்டும் குடிக்காமல் இருந்தால் பயனில்லை. இறைவனை தொழுதுவிட்டு வந்த பிறகும் குடிக்காமல் இருக்க வேண்டும் என்று கூறினார் நபிகள் நாயகம்.

கடைசியில் அந்த நபருக்கு குடிப்பதற்கே நேரம் இல்லாமல் போய்விட்டது. இறைவனிடம் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே நல்ல பழக்க வழக்கங்கள் வர வேண்டும் என்பதற்காகத்தான். அனைத்து மதங்களும் இதைத்தான் நமக்கு போதிக்கின்றன. நபிகள் நாயகம் நற்பண்புகளை போதித்தது மட்டுமல்லாமல், அதன்படி வாழ்ந்தும் காட்டியவர்.

நபிகள் நாயகத்தின் போதனைகளை அனைவரும் கடைபிடித்து வாழ்ந்தால், இந்திய நாடு அமைதிப் பூங்காவாக விளங்கும் என்பதை தெரிவித்துக்கொண்டு, அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகளை, மீண்டும் ஒரு முறை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

மேலும் செய்திகள்